புரட்டாசி முதல் வாரம் : பெருமாள் கோயில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
கம்பம்; புரட்டாசி முதல் வாரமான இன்று காலை கம்பம் பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
கம்பம் கம்ப ராயப் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு காலை முதல் பெருமாளுக்கு விசேச அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் குறிப்பாக பெண்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
உத்தமபாளையம் யோக நரசிங்க பெருமாள் கோயிலில் சுதர்சன ஹோமம் நடைபெற்றது. கலசத்திற்கு பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள்பொடி, திருமஞ்சனம், தேன், சந்தனம் போன்ற பொருள்களால் அபிஷேகம் செய்து அந்த புனிதநீர் பெருமாளுக்கு சார்த்தப்பட்டது. நடைபெற்ற விசேச அபிஷேக ஆராதனைகள் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.
சின்னமனூர் லெட்சுமிநாராயண பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் வார சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனர். இங்கு லெட்சுமி நாராயணப்பெருமாள் நின்ற நிலையில் உள்ளது சிறப்பாகும். கோம்பை ரெங்கநாத பெருமாள் கோயிலில் அதிகாலை முதல் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர். மலை மீதுள்ள இந்த கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் கம்பம் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் மட்டுமல்லாமல் கேரள மாநிலம் சதுரங்காபாறை, ராமக்கல் மெட்டு பகுதியில் இருந்து வனப்பகுதிகள் வழியாக ஏராளமான பக்தர்கள் நடந்து வந்து முதல் வார பூஜைகளில் பங்கேற்றனர். கம்பம் பகுதியில் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது.