வரதராஜ பெருமாள் கோவில் வசந்தோத்ஸவ விழா; மே 31ல் வைகையில் இறங்குகிறார் அழகர்
பரமக்குடி: -பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் 119 வது வைகாசி பவுர்ணமி வசந்தோத்ஸவ விழாவில் மே 31 அதிகாலை பெருமாள் அழகர் திருக்கோலத்தில் வைகையில் இறங்குகிறார்.
எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியமான பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு 224 வது பிரம்மோற்ஸவ விழா நடக்கிறது. நேற்று காலை குதிரை வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள், இரவு தேரில் ரத வீதிகளில் வலம் வந்தார். இன்று இரவு கொடி இறக்கப்பட்டு பிரமோற்ஸவம் நிறைவடையும். நாளை (மே 30) காலையில் பெருமாளுக்கு கும்பத் திருமஞ்சனத்துடன் 119வது வசந்த விழா துவங்குகிறது. மே 31 அதிகாலை 4:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூ பல்லக்கில் அமர்ந்து வைகையில் இறங்குகிறார். காலை 10:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகி பெரிய கடை பஜார் வழியாக வைகை ஆற்றில் மாலை 5:00 மணிக்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் அருள்பாலிக்கிறார். இரவு வண்டியூர் மண்டகப்படியை அடைந்து சந்தன காப்பு நடக் கிறது.
ஜூன் 1 மாலை சேஷ வாகனத்தில் அமர்ந்து மண்டூக மகரிஷிக்கு காட்சி அளித்தும், இரவு அவதார சேவையில் அருள்பாலிக்க உள்ளார். தொடர்ந்து வைகையில் கருட, அனுமார் வாகனத்தில் எழுந்தருளி, ஜூன் 4 இரவு மீண்டும் கள்ளர் திருக்கோலத்துடன் இரவு 9:00 மணிக்கு வைகையிலிருந்து பூ பல்லக்கில் திருக்கோயிலை நோக்கி வலம் வர உள்ளார்.