கடகம்: படிப்பில் கவனம்!
சந்திரனை ஆட்சிநாயகனாகக் கொண்ட கடகராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சந்திரன் நட்பு வீடான தனுசுவில் இருக்க ஆவணி பிறக்கிறது. இதனால் மனதில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். பகைவர்களை முறியடிக்கும் ஆற்றல் உருவாகும். சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மை தரும் நிலையில் உள்ளார். அவர் 3-ம் இடமான கன்னியில் இருந்து குடும்பத்தில் நல்ல அனுபவங்களையும், மனதில் உற்சாகத்தையும் வாரி வழங்குவார். தம்பதியர் இடையே இருந்த கருத்துவேறுபாடு மறைந்து ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உடல் நலம் சிறப்படையும். செப்.8ல் சுக்கிரன் 4-ம் இடத்துக்கு சென்று நன்மையை அள்ளித்தருவார். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கல்விகாரகனான புதன் 2-ம் வீட்டில் இருந்து பிற்போக்கான பலனை தரலாம். குறிப்பாக அவப்பெயர் வரலாம். உங்கள் படிப்புக்கு பாதிப்பு ஏற்படலாம். அதே நேரம், புதனின் பார்வை மூலம், படிப்பில் கவனமாக இருந்து முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி உறுதி. பெண்கள் புத்தாடை அணி கலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். செப்.3ல் புதன் தனது வீடான கன்னிராசிக்கு செல்கிறார். இதனால் பகைவரால் இடையூறு உருவாகும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.சூரியன் ஆட்சி வீடான சிம்மத்தில் இருக்கிறார். ராசிக்கு 2-ம் இடமாக சிம்மம் இருப்பதால் பொருள் விரயம் ஏற்படும். கண் வலி வரலாம்.பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எந்த ஒரு செயலும் நிறைவேற விடாமுயற்சியும், அலைச்சலும் இருக்கவே செய்யும். கையில் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். தொழில் விஷயமாக யாரிடமும் வாக்குவாதம் கூடாது. கலைஞர்களுக்கு புகழ் பாராட்டு கிடைக்கும். உடல்நலன் சுமாராக இருக்கும். பயணத்தின் போது கவனம் தேவை.
நல்ல நாட்கள்: ஆகஸ்ட் 17, 18,19,20,26,27,28,29,செப்.2, 3,7,8,13,14,15,16
கவன நாட்கள்: ஆகஸ்ட் 21,22
அதிர்ஷ்ட எண்கள்: 4,8 நிறம்: வெள்ளை
வழிபாடு: ஊனமுற்றவர்கள், மூதாட்டிகளுக்கு உதவியும். காலையில் சூரியதரிசனமும் செய்யுங்கள். முருகன் கோயிலுக்கு சென்று வாருங்கள். ஏழைகளுக்கு துவரம்பருப்பு தானம் செய்யுங்கள்.