உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தசரா காண மைசூரு வாருங்க!

தசரா காண மைசூரு வாருங்க!

நவராத்திரி திருவிழா தசரா என்ற  பெயரில் மைசூருவில் கொண்டாடப்படுகிறது.  தசரா என்றால்  பத்து தலைகளை கொய்வது. ராமன்   ராவணனை கொன்றதை தசஹர என்பார்கள். இதுவே திரிந்து தசரா ஆயிற்று. ஆனால், மைசூருவில் மகிஷாசுரனை பராசக்தி மகிஷாசுரமர்த்தினியாக உருவெடுத்து அழித்ததாகவும், சாமுண்டீஸ்வரி என பெயர் பெற்றதாகவும் கூறுவார்கள். சாமுண்டீஸ்வரி நமது இடையூறுகளை நீக்கி நினைத்ததை அடையச் செய்பவள். பார்ப்பதற்கு பயங்கரமானவள்  என்றாலும், அன்னையைப் போன்ற அன்புள்ளம் கொண்டவள். இவளுக்கு சோம்பலாக இருப்பது  பிடிக்காது. பிறரை அலட்சியப்படுத்துவதையும் இவள் விரும்புவதில்லை. பத்து முகமும் பத்து  கால்களும், பத்து கைகளும் கொண்டவள். மைசூரு தசரா திருவிழா 16ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர்கள் ஆண்டபோது ஆரம்பமானது. ஆரம்பத்தில் ஹம்பியில் இந்தவிழா நடந்தது. காலப்போக்கில் மைசூருவுக்கு மாறியது. விழாவைக்காண வெளிநாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகள் வந்து குவிகிறார்கள். மைசூருவில் மல்லிகை, சந்தனம், கத்தரிக்காய், வெற்றிலை, பட்டு முக்கியமானவை. நவராத்திரி காலத்தில் இவற்றின் விற்பனை அதிகமாக  இருக்கும். தசரா விழாவின்போது மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலும் அரண்மனையும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பொருட்காட்சியும் உண்டு. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி ஏராளமான யானைகள் ஊர்வலம் வருவதுதான். இந்த யானைகளில்  எந்த யானை அன்னை சாமுண்டீஸ்வரியை சுமக்கப்போகிறது என்பதுதான் முக்கியமான விஷயம். இந்த யானையின் மீது தங்க சிம்மாசனம் அமைத்து அதற்குள் சாமுண்டீஸ்வரியின் சிலையை வைத்து ஊர்வலமாக கொண்டுவருவார்கள். இதற்காக இங்கு வரும் அனைத்து யானைகளும் பரிசோதிக்கப்பட்டு தகுந்த யானை தேர்வு செய்யப்படும். தசரா விழாவிற்காக பல கோடி ரூபாய், மாநில அரசின் சார்பில் செலவழிக்கப் படும். வெறும் விழா செலவாக இல்லாமல், மைசூருவில் வளர்ச்சிப்பணிகளும் செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !