உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழிவின் விளிம்பில் உள்ள காரணந்தல் பெருமாள் கோவில்!

அழிவின் விளிம்பில் உள்ள காரணந்தல் பெருமாள் கோவில்!

செஞ்சி: அழிவின் விளிம்பில் உள்ள காரணந்தல் பெருமாள் கோவிலை பாதுக்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செஞ்சி தாலுகாவில் கலை நயமிக்க ஏராளமான கோவில்கள் படையெடுப்பின் போது அடித்து நெறுக்கப்பட்டன. இது போன்று கொள்ளையடிக்கப்பட்ட கோவில்களில் செஞ்சி தாலுகா காரணந்தல் கிராமத்தில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான பெருமாள் (கிருஷ்ணர் கோவில் என்றும் கூறுகின்றனர்) கோவிலும் ஒன்று. இதை கோவிலாக மட்டும் இன்றி செஞ்சியில் இருந்து தேசூர், வந்தவாசி என அடுத்துள்ள ராஜ்யங்களுக்கு செல்லும் பெருவழி பாதையில் வழிப்போக்கர்கள் தங்குவதற்கான சத்திரமாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். கலை நயமிக்க சிற்பங்களுடன் அழகிய தூண்களை கொண்டு முற்றிலும் கருங்கற்களால் கோவிலை கட்டியுள்ளனர். கோவிலுக்கு அருகே இரண்டு சிறிய மண்டபங்களை கட்டி உள்ளனர்.
ஒரு மண்டபத்தில் உற்சவருக்கு விழா எடுக்கவும், மற்றொன்றில் சத்திரத்தில் தங்குபவர்களுக்கு உணவு செய்யவும் பயன்படுத்தி உள்ளனர். கோவில் எதிரே 20 அடி உயரத்தில் கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், சங்கு, நாமத்துடன் கூடிய கருங்கல் தீபஸ்தம்பம் உள்ளது. கோவிலின் தெற்கே மிகப்பெரியகுளமும், இதற்கு வரும் தண்ணீர் சுத்தமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக முன்னதாக சிறிய குளம் ஒன்றையும் வெட்டி உள்ளனர். படையெடுப்பின் போது கருவறையில் இருந்த சாமி சிலையை பெயர்த்து எடுத்து சென்றுள்ளனர். பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ள இந்த கோவிலை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. கல் கட்டுமானங்கள் நகர்ந்து ஆங்காங்கே இடிந்து விழுந்து வருகின்றன. தரை பகுதியில் உள்ள பலகை கற்கள் பெயர்ந்துள்ளன. தற்போது இப்பகுதியில் உள்ளவர்கள் இதில் மாடுகளை கட்டி பராமரித்து வருகின்றனர். கோவில் உள்ள காரணந்தல் கிராமத்தில் குறைந்த மக்கள் தொகையினரே வசிக்கின்றனர். அத்துடன் இவர்கள் அனைவரும் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவே இக்கோவிலை புதுப்பிக்காமல் உள்ளனர். சிறந்த கல் கட்டுமானமும், அழகிய சிற்ப வேலைப்பாடும் உள்ள இக்கோவிலை புதுப்பிக்க வில்லை எனில் விரைவில் இடிந்து விழுந்து மண்ணோடு மண்ணாகும் அபாயம் உள்ளது. எனவே இக்கோவிலை பாதுகாக்க இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !