ராமேஸ்வரம் கோயிலில் கூடுதல் கட்டணம்: ஐகோர்ட் தடை!
மதுரை: ராமேஸ்வரம் கோயிலில் தீர்த்தமாட பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுத்து, இடையூறின்றி சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கோவை வக்கீல் வெண்ணிலா தாக்கல் செய்த பொதுநல மனு: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலைச் சுற்றி, கழிவுகள் தேங்கியுள்ளன. கழிவுகள் அக்னி தீர்த்த பகுதியில் கலக்கிறது. 22 இடங்களில் தீர்த்தமாட, புரோக்கர்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். அக்னி தீர்த்தத்தை சுத்தம் செய்ய வேண்டும். கோயிலின் புனிதத் தன்மையை பாதுகாக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். ஏற்கனவே வக்கீல் கமிஷனர்கள் எஸ்.எஸ்.சுந்தர், என்.கிருஷ்ணவேணி, எஸ்.சீனிவாசராகவன் கோயிலை ஆய்வு செய்து, இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தனர். அதில்,அக்னி தீர்த்த பகுதியில் தேங்கியுள்ள நீர், பழுப்பு நிறமாக மாறி, துர்நாற்றம் வீசுகிறது. விடுதிகள், ஓட்டல்கள், கடைகளின் கழிவுநீர் கலக்கிறது. மொத்தத்தில், மனிதர்கள் புனித நீராட தகுதியான, துாய்மையான இடமாக இல்லை; கால்களைக்கூட நனைக்க முடியாது என, குறிப்பிட்டனர்.
நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி கொண்ட பெஞ்ச் முன், மனு நேற்று விசாரணைக்கு வந்தது. ராமேஸ்வரம் நகராட்சி கமிஷனர் கண்ணன் ஆஜரானார்.
வக்கீல் கமிஷனர்கள் தாக்கல் செய்த தற்போதைய நிலை குறித்த அறிக்கை: பாம்பன் பாலத்தில் போதிய மின் விளக்கு வசதிகள் இல்லை. மொத்தம் 60 ல் 18 விளக்குகள் எரியவில்லை. கோயிலுக்குச் சொந்தமாக, 60 ஆயிரம் சதுர அடி இடம் உள்ளது. அதில், வாகன நிறுத்துமிடம் அமைக்கலாம். 22 தீர்த்தங்களில் நீராடிவிட்டு, வெளியேற மாற்றுப்பாதை தேவை. தீர்த்தமாடும் பக்தர்களிடம் கோயில் ஊழியர்கள், அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.
கோயிலின் கிழக்கு வாசல் பகுதியில் இடையூறாக உள்ள 15 கடைகள், கோயில் அருகே உள்ள 2 டாஸ்மாக் கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். திருச்செந்துார் கோயில்போல், இங்கும் பக்தர்கள் தங்க சத்திரம் அமைக்க வேண்டும். குடிநீர், இலவச கழிப்பறை வசதி செய்ய வேண்டும். அக்னி தீர்த்த பகுதியில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும். கழிவுநீர் கடலில் கலப்பதை தடுக்க, நீண்ட துாரம் கடத்தி, வெளியேற்றலாம். இவ்வாறு குறிப்பிட்டனர்.
நீதிபதிகள்: கோயில் இணை கமிஷனர், ராமேஸ்வரம் நகராட்சி கமிஷனர் 2 நாட்களில் ஆலோசனை கூட்டம் நடத்தி, கோயில் மற்றும் சுற்றுப்பகுதியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை யை செயல்படுத்த, நகராட்சி கமிஷனர் புதிதாக டெண்டர் விட வேண்டும். தீர்த்தமாடும் பக்தர்கள், கூடுதல் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போர்டுகளை வைக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க, ராமேஸ்வரம் டி.எஸ்.பி.,தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். பக்தர்கள் இடையூறின்றி சென்றுவரும் வகையிலான திட்டத்தை, டி.எஸ்.பி.,வகுக்க வேண்டும். ராமநாதபுரம் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தற்போதைய நிலை குறித்து வக்கீல் கமிஷனர்கள், நகராட்சி கமிஷனர், கோயில் இணை கமிஷனர் ஜன.,23 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.