உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உரிய காலத்தில் செய்யும் உதவியே சிறந்தது!

உரிய காலத்தில் செய்யும் உதவியே சிறந்தது!

அறக்கடலாக இருக்கும் கடவுளின் திருவடிகளைச் சரணாகதி அடையாவிட்டால் பிறவிப் பெருங்கடலை நம்மால் நீந்திக் கரையேற முடியாது. தனக்கு உவமை இல்லாத இறைவனின் திருவடிகளைப் போற்றி வணங்கினால் மனக்கவலை அனைத்தும் நீங்கிவிடும்.  இந்த உலகமே மழைநீரால் தான் வாழ்கிறது. மழை இல்லாவிட்டால் ஒரு புல்லைக்கூட நம்மால் காண முடியாது. கோயிலில் கடவுள் வழிபாடு நடைபெறாது. மனித சமுதாயம் ஒழுக்கநெறியில் இருந்து பிறழ்ந்து விடும். அதனால் உலகை வாழவைக்கும் மழைநீர் உயிர்காக்கும் அமுதம் போன்றதாகும்.

 உலகில் இறந்த உயிர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட முடியாதது போல உலக இன்பங்களை துறந்த நல்லவர்களின் பெருமையையும் நம்மால் அளவிட முடியாது. ஐம்புலன்களையும் கட்டிக் காக்கும் பலம் மிக்க அவர்கள், விண்ணுலக வாழ்விற்கு விதை போன்றவராவர். பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கு குணங்களையும் மனதில் இருந்து நீக்கவேண்டும். மாசு இல்லாமல் தூயமனம் கொண்டு வாழ்ந்தாலே, எல்லா தர்மங்களையும் செய்ததற்கு சமமாகும்.  உலகில் வாழும் முறைப்படி நீதி தவறாமல் வாழும் மனிதன் வானுலகில் வாழும் தேவர்களுக்கு இணையாவான்.

உயிரானது உடம்பில் எப்படி தொடர்பு கொண்டிருக்கிறதோ, அதுபோல உலகவாழ்விற்கு அன்பின் தொடர்பு அவசியம். அன்பில்லா உயிர்கள் உலகில் வாழமுடியாது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்ப்பாள் இல்லை. கண்ணில் வழியும் கண்ணீரே அன்பினைக் காட்டிவிடும். உள்ளத்தில் பணிவும், வாயில் இனிய சொற்களும் இருக்குமானால் வேறு அணிகலன்கள் எதுவும் ஒருவருக்குத் தேவையில்லை. இனிய பழங்கள் இருக்க, புளிக்கும் காயை உண்பதுபோல உலகில் சிலர் இனிய சொற்களை விட்டு கடுஞ் சொற்களைப் பேசுகிறார்கள். உரிய காலத்தில் செய்யும் உதவியே காலத்தினால் செய்த நன்றியாகும். இவ்வுதவி அளவில் சிறிதாக இருந்தாலும், இந்த உலகைக் காட்டிலும் பெரிதாக மதிக்கவேண்டும். ஒருவர் செய்த நன்றியை மறப்பது நல்லதல்ல. ஆனால், ஒருவர் செய்த கெடுதலை அன்றே அக்கணமே மறந்துவிடுவது நல்லது.

பிறருக்கு தீங்கினை முற்பகலில் செய்து மகிழ்ந்தால், நமக்கு கெடுதல் பிற்பகலிலேயே தண்டனையாகக் கிடைத்துவிடும். யாராக இருந்தாலும் நாவினைக் காத்து வாழ வேண்டும். துன்பம் வரும்போது ஆமை தன்னுறுப்புகளை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வது போல ஐம்புலன்களையும் தன்னுள் அடக்கிக் கொள்ள வேண்டும். ஒழுக்கமே ஒருவருக்குப் பெருமை தருவதாகும். அதனால், அதனை உயிராக மதித்துப் போற்றுவோம். நன்மைக்கு விதையாக நல்லொழுக்கமும், தீமைக்கு விதையாக தீயொழுக்கமும் அமைந்து விடுகிறது.

பொறாமை கொண்டவனின் சுற்றம் கூட உடுத்த உடையும், உண்ண உணவும் இல்லாமல் துன்பப்படும். பொறாமையால் வாழ்வில் உயர்ந்தவரும் இல்லை. பொறாமை இல்லாமையால் வாழ்வில் கெட்டவரும் இல்லை. குற்றம் என்பது நம்மிடமும் உண்டு. பிறரிடமும் உண்டு. இதை மனிதர்கள் உணர்ந்தால் உலகில் துயரம் என்பதே சிறிதுமில்லை. ஒருவர் இல்லாதபோது, அவரைப் பற்றிப் பேசும் புறங்கூறும் எண்ணத்தை விட்டொழிப்போம். பேசுவதாக இருந்தால் பயனுள்ள நல்ல சொற்களை மட்டும் பிறரிடம் பேசுங்கள். பொருள் தேடாவிட்டால் இவ்வுலக வாழ்வு மனிதனுக்கு இல்லை. அதுபோல, அருளைத் தேடாவிட்டால் விண்ணுலக வாழ்வு இல்லை.

நீராடினால் இவ்வுடல் தூய்மை பெறுவதுபோல, மனம் வாய்மை என்னும் உண்மையால் மட்டுமே தூய்மை பெறுகிறது. வாய்மை என்பது எது தெரியுமா? எவ்வுயிருக்கும் தீமை தராத நல்ல சொல்லே வாய்மையாகும்.  தன்னிடம் இருக்கும் செல்வத்தை ஒருவன், பிறருக்கும் பகுத்துக் கொடுத்து வாழவேண்டும். -திருவள்ளுவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !