அரசமரத்தடி நாகங்கள்!
இந்தியாவில் மட்டுமின்றி, பிற நாடுகளிலும் பாம்பை வழிபடும் வழக்கம் இருக்கிறது. சிந்து சமவெளி நாகரிக காலத்திலேயே நாகவழிபாடு இருந்து வந்துள்ளது. சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்களுக்கு ஆபரணம், இருக்கையாகவும் பாம்புகளை உருவாக்கினர். பாம்புக்கே மூலஸ்தானம் அமைத்து, நாகராஜர் கோயில்களையும், புற்றுக்கோயில்களையும் உருவாக்கினர். பாம்பால், விவசாயிகளுக்கு பிரச்னை வரக்கூடாது என்பதால் அதை வழிபடும் வழக்கம் வந்தது. அரசன் ஒருவனின் பிள்ளைகளான ஏழுபேர் ஒரே சமயத்தில் நாகம் தீண்டி இறந்தனர். அவர்களோடு பிறந்த தங்கை ஒருத்தி மட்டும் இருந்தாள். அவள் விரதமிருந்து, பாம்பிருந்த புற்று மண்ணை நீரில் கரைத்து, இறந்த சகோதரர்களின் உடலில் பூசினாள். அவர்கள் அனைவரும் உயிர் பெற்று எழுந்தனர். இதையடுத்து அரசமரத்தடியில் ஒன்பது நாகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடும் வழக்கம் வந்தது. அனந்தன், வாசுகி, குஷகாயன், அப்ஜன், மகரிஅப்ஜன், கங்குபாலன், கார்கோடன், குளிஜன், பத்மன்
என்று அந்த நாகங்களுக்குப் பெயர். இந்த விக்ரஹங்களுக்கு பால் அபிஷேகம் செய்வர். புற்றுமண்ணை நெற்றியில் இட்டுக்கொள்வர். பஞ்சமி மற்றும் நாகசதுர்த்தி திதிகளில் நாகராஜாவை எண்ணி விரதமிருந்தால் நாகதோஷம், புத்திர தோஷம் நீங்கும். ராகுகேதுவால் உண்டாகும் திருமணத் தடை அகலும்.