காரியசித்தி வீர ஆஞ்சநேயர் 19ல் மஹா கும்பாபிஷேகம்
சேலம்: ஓமலூர் அருகே, காரியசித்தி வீர ஆஞ்சநேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம் வரும், 19ம் தேதி கோலாகலமாக நடக்கிறது.ஓமலூர் வட்டம், காடையாம்பட்டி, காரியசித்தி வீர ஆஞ்சநேயர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, வரும், 16ம் தேதி, காலை, 6 மணியளவில், கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. மாலை, 4 மணிக்கு, பக்தி பாடல்கள் நிகழ்ச்சியும், மாலை, 6 மணியளவில், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி செய்து, தீபாராதனை நடக்கிறது. மறுநாள், 17ம் தேதி, காலை, 6 மணியளவில், புண்ணிய நதிகளின் தீர்த்தங்களை கொண்டு கோபுரகலசங்களும், கஜ பூஜை, அஷ்வ பூஜை, கோ பூஜை செய்து, வழிப்பாடு நடக்கிறது. மாலை, 5 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, முதல்கால யாக பூஜை, வேதிகார்சணமும் செய்கின்றனர். இரவு, 9 மணிக்கு, சாற்றுமறை ஓதி, பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்படுகிறது. 18ம் தேதி காலை, 7 மணியளவில், இரண்டாம் காலயாக பூஜை, கோபுர கலச ஸ்தாபனம், கோபுரத்தில் உள்ள மூர்த்திகளுக்கு கண் திறப்பு, பகல், 12.30 மணியளவில் தீபாராதனை செய்து, தீர்த்தபிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை, 5 மணிக்கு, யந்தர ஸ்தாபனம், மூன்றாம்கால யாக பூஜை, இரவு, 9 மணிக்கு, அஷ்டபந்தனம் செய்கின்றனர். 19ம் தேதி, புதன்கிழமை காலை, 7 மணிக்கு சுப்ரபாதம், திருபள்ளியெழுச்சி, நான்காம் காலயாக பூஜை, யாத்ரா தானம், கலச புறப்பாடு நடக்கிறது. காலை, 9.45 மணிக்கு மேல், 10.45 மணிக்குள், பரிவார விமானங்களுடன் கூடிய காரியசித்தி வீர ஆஞ்சநேயருக்கு மஹாசம்ப்ரோஷணமும், வரசித்தி விநாயகர், மங்கள நவகிரஹத்துக்கும் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.காலை, 11 மணிக்கு மஹா தீபாராதனை செய்து, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது.