பாண்டீஸ்வர சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா!
பொங்கலூர் : பொங்கலூர் அருகே பெருந்தொழுவு பாண்டீஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கோபுர தரிசனம் செய்தனர். பர்வதவர்த்தினி உடனமர் பாண்டீஸ்வர சுவாமி கோவில் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதையொட்டி, கோபுரம் மற்றும் சுற்றுச்சுவர் உள்ளிட்டவை புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதை யொட்டி, கடந்த திங்கள்கிழமை காலை 9.05 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. மாலை 5.30 மணிக்கு முதல்கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. மாலை 4.00 மணிக்கு பக்தர்கள் முளைப்பாரி எடுத்துக்கொண்டு மாகாளியம்மன் கோவில், பெருமாள் கோவில் வழியாக ஊர்வலமாக வந்தனர். மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், பூர்ணாஹூதி ஆகியவை நடந்தன. நேற்று காலை 4.00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜை நடந்தது. காலை 5.45 மணிக்கு கலசங்கள் யாக சாலையில் இருந்து எடுத்து வரப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சிவசிவ கோஷம் எழுப்பினர். பின், பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேகத்தை ராஜபட்டர் தலைமையில் பேரூர் ஆதீனம் இளைய பட்டம் மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூர் மேல்மடம் ஞானசிவாச்சாரியார் சுவாமிகள் ஆகியோர் நடத்தி வைத்தனர். மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், ஒன்றிய தலைவர் சிவாசலம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சின்னு மற்றும் விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.