ராகவேந்திரர் கோவிலில் 10,008 தீப வழிபாடு!
திருவள்ளூர் : திருவள்ளூர், ராகவேந்திரர் சுவாமி கோவில், ஆராதனை மகோற்சவத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம், 10,008 தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். திருவள்ளூர், தெற்கு குளக்கரை தெருவில், ராகவேந்திரர் மடம் உள்ளது. இங்கு, ராகவேந்திரர் சுவாமிக்கு ஆராதனை மகோற்சவம், கடந்த 11ம் தேதி துவங்கியது. முதல் நாளன்று, மாலை 6:00 மணிக்கு, சத்ய நாராயண பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது.மறுநாள், காலை 5:00 மணிக்கு, 10,008 அர்ச்சனைகள் நடந்தன. தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு ராகவேந்திரர் சன்னிதியில் சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன், சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்று இரவு 7:00 மணிக்கு, ராகவேந்திரர் சன்னிதியில், 10,008 தீபங்கள் ஏற்றப்பட்டு, தீபோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, பக்தியுடன் தீபம் ஏற்றி, ராகவேந்திரரை வழிபட்டனர்.