உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாயைப் பெருமைப்படுத்துகிறார் தேசியக்கவி பாரதியார்!

தாயைப் பெருமைப்படுத்துகிறார் தேசியக்கவி பாரதியார்!

கல்லில் கடவுள் இருக்கிறார் என்பதை நம்புகிறீர்கள். அதுபோல், நம்மைச் சுற்றியுள்ள மக்களிடமும் தெய்வம் இருக்கிறது என்று நம்புங்கள். தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் காண்பவனே உண்மையில்  கண் உடையவன்.  அம்பிகையைத் தாயாக வழிபடுகிறோம். அவளைப் போலவே, நம்முடைய அம்மா, சகோதரி, மனைவி என எல்லா பெண்களையும் தாயாகக் காண வேண்டும். தாயே நமக்கு சகலமுமாக இருக்கிறாள். கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி..அதில் தவறில்லை. ஆனால், பிறரை ஏமாற்றாமல் வாழ்ந்தாலே தெய்வத்தின் அருளைப் பூரணமாகப் பெறலாம். தெய்வம் விட்ட வழி நல்வழி என்று பாரத்தைக் கடவுள் மீது வைத்து விட்டு வாழ்வு நடத்துபவன் தெய்வத்தன்மை அடைந்து விடுவான். உலகில் மனிதன் எதுவரை அநியாயம் செய்கிறானோ, அதுவரை கலியுகம் இருந்து கொண்டு தான் இருக்கும். எல்லோரும் அநியாயம் செய்து கொண்டிருக்க, நான் மட்டும் ஏன் நியாயவழியில் நடக்க வேண்டும் என்று விபரீதமாக யோசிப்பது கூடாது.  நடந்தது எல்லாம் போகட்டும். இனி நடக்க வேண்டியதை யோசித்து நன்மையாற்றுங்கள். சமூகத்தில் ஒரே ஒருவன் தர்மத்தைப் பின்பற்றினால் கூட, அவனைப் பார்த்து பத்துபேர் திருந்தி நல்வழியில் நடக்க முயல்வார்கள்.  தியானத்தின் சக்தியை யாரும் எளிதாக மதிப்பிட வேண்டாம்.

விரும்பியதை எல்லாம் அடைவதற்கு தியானம் நல்ல சாதனமாக இருக்கிறது. புதரில் பிடித்த தீ போல, நம் மனதிலுள்ள கவலை,பயம் போன்ற எண்ணத்தை எரிக்கும் ஜோதியே தியானம். அமைதி, பலம், தேஜஸ், சக்தி, அருள், பக்தி, வீரம், தீரம் போன்ற நல்ல எண்ணங்கள்  எப்போதும் மனதில் நிரம்பி இருக்கட்டும். ஊற்றில் இருந்து நல்ல நீர் ஊறுவது போல, தியானம் செய்வதன் மூலம் மனதில் தெளிந்த அறிவும், தீரமும், சக்தியும் மென்மேலும் பொங்கி வரும்.  காலம் பணவிலை உடையது என்பதை நம்மவர்கள் உணர்ந்து கொள்வதே இல்லை. பொழுதை வீணாகக் கழிப்பதால், பணலாபம் கிடைக்காமல் போய் விடுகிறது. இன்று செய்ய நினைத்ததை நாளை செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவது கூடாது. இதனால், அதைச் செய்யாமல் போய் விட நேரிடலாம். வெற்றி நிச்சயம் என்று உறுதியாக இருக்கும் செயலில் கூட, சூட்டோடு சூடாக செய்யாமல் போனால், அதற்குத் தகுந்தாற் போல பலனில் குறைவு ஏற்படவே செய்யும்.  வாய்ப்பேச்சு ஒரு மாதிரியாகவும், செயல் வேறொரு மாதிரியாகவும் இருப்பவர்களின் நட்பை கனவிலும் ஏற்றுக் கொள்வது கூடாது. மனிதனுக்குப் பகைவர்கள் வெளியில் யாரும் இல்லை. மனதிற்குள்ளே பயம், சந்தேகம், சோம்பல் போன்ற பகைவர்கள் மலிந்து கிடக்கிறார்கள்.  எத்தனை பெரிய ஆபத்துகள் வாழ்வில் குறுக்கிட்டாலும், அவற்றை நம்பிக்கையால் தகர்த்து வெற்றியை அடைந்து விடலாம்.  அச்சமே மடமை. அச்சமின்மையே அறிவுடைமை. விபத்துக்கள் வரும் போது நடுங்குபவன் மூடனே. அவன் எத்தனை சாஸ்திரம் படித்திருந்தாலும் பயனில்லை. கொள்கை அளவில் மட்டுமே அன்பு இருக்கிறது. அதைச் செயலாக வெளிப்படுத்தினால் மட்டுமே உலகம் முழுமையும் பயன் பெறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !