முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயிலில் ஜூலை 3ம் தேதி கொடியேற்றம்
முக்கூடல் : முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயில் ஆனித் திருவிழா வரும் ஜூலை 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முத்துமாலை அம்மன் கோயில் ஆனித் திருவிழா சிறப்பு வாய்ந்தது. இத்திருவிழாவிற்கு முக்கூடலை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இத்திருவிழா வரும் ஜூலை 3ம் தேதி காலை சுமார் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கி மதியம் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மாலையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. கோயிலில் இருந்து அம்மன் ஊருக்குள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதியுலா வந்து நகரில் தங்கி, 9ம் நாளன்று வீதியுலா முடிந்து கோயிலுக்கு வருகை தந்து, 10ம் திருநாளன்று கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். ஒவ்வொரு நாள் திருவிழாவையும் ஒவ்வொரு தெரு மக்களும், இளைஞர் நற்பணி மன்றத்தினரும், கடை வியாபாரிகள் சங்கத்தினரும் நடத்துகின்றனர். 9,10,11ம் திருநாள் விழாவை கோயில் நிர்வாகத்தினர் நடத்துகின்றனர். ஒவ்வொரு நாள் இரவிலும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. சிறப்பு நிகழ்ச்சியாக சினிமா நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சியும், சிறப்பு பட்டிமன்றமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி முன்னாள் எம்.பி.சிவப்பிரகாசம் தலைமையில் விழாக் கமிட்டியார் செய்து வருகின்றனர்.