பழநி தைப்பூசத் திருவிழா: இன்று ஐந்தாம் நாள்!
முருகனின் கொடியில் இருப்பது சேவல். கீழ்வானில் சூரியன் உதிக்கும் முன்பே சேவல் விடியலை நமக்கு அறிவித்து விடுகிறது. இந்த வாழ்வு நிலையானது என்ற துாக்கத்தில் நாம் இருக்கிறோம். இது தற்காலிகமானது. இந்த உலகம் வாடகை வீடு என்னும் விழிப்பு நிலை பெற வேண்டும் என்பதே சேவல் கூறும் தத்துவம். இதனால் தான் பழநி முருகன் கோவணத்தை தவிர எதுவும் அணியாமல், வாழ்வின் யதார்த்தத்தை நமக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். முருகப்பெருமானும் சூரபத்மனும் போரிடும் போது சூரன் மாயசக்தியினால் மாமரமாகி நின்றான். முருகன் அந்த மரத்தை தன் வேலினால் இரண்டு கூறாகப் பிளந்தார். ஒருபுறம் மயிலாகவும், மறுபுறம் சேவலாகவும் மாறியது. மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டார். இதில் ஒரு தத்துவம் புதைந்துள்ளது. தான் என்ற எண்ணம் தான் சூரன். மாமரத்தை வேல் பிளந்தது போல், வாழ்வின் உண்மை நிலை பற்றிய ஞானத்தை அறிந்து கொண்டால் கடவுள் நிலையை அடையலாம். கொக்கு என்றால் மாமரம் என்றும் ஒரு பொருளுண்டு. சேவல் கொக்கரக்கோ கூவும். இதை கொக்கு+அறு+கோ என்று பிரிக்கலாம். சூரனாகிய மாமரத்தை பிளந்த மன்னவனே என்று இதற்கு பொருள். சேவல் ஒவ்வொரு நாளும் இவ்வாறு முருகப் பெருமானை கூவி அழைத்து, நம்மையும் அவரை வழிபடச்சொல்கிறது.* காலை 9.00 மணிக்கு முத்துக்குமார சுவாமி தந்தப்பல்லக்கில் பவனி. இரவு 7.30 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் பவனி.