பார்த்தசாரதி கோவிலில் மகா சம்ரோக் ஷணம் ஆக., 22ல் நடப்பதால் ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் அமைந்துள்ள யோகநரசிம்மன் சுவாமிக்கு, வரும் 22ம் தேதி, அஷ்ட பந்தன மகா சம்ரோக் ஷணம் நடக்கிறது. சென்னை, திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள யோகநரசிம்மன், வரதராஜசுவாமி, திருமழிசையாழ்வார், கருடாழ்வார், குளக்கரை ஆஞ்சநேயர் சன்னிதிகள், அதன் விமானங்கள், பின் கோபுரவாசல் விமானம், பாண்டி கோபுரம், நரசிம்மர் கல்யாண மண்டபம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, கடந்த ஜூலை, 10ம் தேதி, திருப்பணிகள் துவக்கப்பட்டன. தற்போது, திருப்பணிகள் முடிந்த நிலையில் அஷ்டபந்தன மகா சம்ரோக் ஷணம், வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது.
இதுகுறித்து, கோவில் உதவி கமிஷனர் ஜோதிலட்சுமி கூறியதாவது: யோகநரசிம்ம சுவாமி உள்ளிட்ட சன்னிதிகளுக்கு, தொல்லியல் துறை வல்லுனர்களின் ஆலோசனைப்படி, பழமை மாறாமல், 95 லட்சம் ரூபாய் செலவில், திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. முதன்முறையாக நரசிம்ம சுவாமிக்கு சொர்ண பந்தனமும், கஜேந்திர வரதராஜசுவாமிக்கு ரஜத பந்தமும் பொருத்தப்பட்டுள்ளது. நடக்கவுள்ள அஷ்ட பந்தன சம்ரோக் ஷணத்தை முன்னிட்டு, ஆக., 18லிருந்து ஹோமங்கள் துவங்கியுள்ளன. சம்ரோக் ஷணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு, காவல் துறை, சென்னை மாநகராட்சி, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.