திருப்போரூர் கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவம் கோலாகல துவக்கம்
திருப்போரூர்: கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. திருப்போரூரில் உள்ள பிரசித்திபெற்ற கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவ விழா, நேற்று காலை , கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. காலை , 7:45 மணியளவில்,கோவில் வட்ட மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் கந்தசுவாமி பெருமான் எழுந்தருளினார். பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க, கோவில் சிவாச்சாரியார்களால், 8:25 மணிக்கு கொடியேற்றப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதை தொடர்ந்து, சுவாமி வீதியுலாவும் சிறப்பாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்களும், உள்ளூர்வாசிகளும் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, 12 நாட்கள் நடைபெறும், பிரம்மோற்சவ
விழாவில் ரதோற்சவம், தெப்போற்சவம், திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்டவைகளும் நடைபெற இருக்கின்றன.