சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஐந்து சிவாலயங்களில் சிவராத்திரி விழா
ப.வேலூர்: சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட திருமணி முத்தாறு ஆற்றங்கரைகளில் அமைந்துள்ள ஐந்து சிவாலயங்கள், பஞ்சபாண்டவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதாக, நம்பிக்கை உள்ளது.
இத்தகைய தனித்தனி சிறப்புக்கள் வாய்ந்த சேலம் சுகவனேஸ்வரர், உத்தமசோழபுரம் கரபுரநாதர், பில்லூர் வீரட்டீஸ்வரர், மாவுரெட்டி பீமேஸ்வரர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் உள்ளிட்ட ஐந்து சிவன் கோவில்களும், சேலம் மாவட்டம் ஏற்காட்டிலிருந்து உருவாகும் திருமணி முத்தாற்றின் கரைகளில் உள்ளன. இந்த ஐந்து சிவாலயங்களையும் ஒரே நாளில் வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.
சிவராத்திரியை முன்னிட்டு, இந்த ஐந்து கோவில்களிலும், நான்கு கால பூஜைகள் நடந்தன. சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டு, இரவு முழுதும் விழித்து, தியானத்தில் இருந்து சிவனை வழிபட்டனர். நேற்று (மார்ச்., 5ல்) காலை, நான்காம் கால பூஜைக்கு பின், அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு சிவபெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.