ஆடியில் அருள்பாலிக்கும் அம்மன்: பக்தர்கள் தரிசனம்
சேலம்: ஆடியில், கேட்ட வரத்தை அருள்பாலிக்கும் அம்மன் மகிமையை பெற, காலை முதல், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். ஆடி, இரண்டாவது வெள்ளியான நேற்று, சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் நடை, காலை, 6:00 மணிக்கு திறக்கப்பட்டு, அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, புஷ்ப அலங்காரத்தில், அம்மன் காட்சியளித்தார். குடும்பம் சகிதமாக பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று, தரிசனம் செய்தனர். நெய்தீபமேற்றி வழிபட்டனர். கன்னி பெண்கள், திருமண வரம் வேண்டியும், திருமணமானவர்கள், புத்திர பாக்கியம் கேட்டும், தம்பதியினர், சகல ஐஸ்வர்யங்களும், ஒருசேர கேட்டு, அங்குள்ள முகூர்த்தக்காலில், மஞ்சள், குங்குமம் பூசி, மஞ்சள் கயிறு, வளையல் சூட்டி வேண்டுதல் வைத்தனர். பின், உச்சிகால பூஜை நடந்தது. மதியம் கோவில் நடை சாத்தாமல், இரவு, 10:00 மணிவரை அம்மனை வழிபட, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால், ஏராளமான மக்கள் திரண்டு வந்து, வரம் கேட்டு, அம்மன் அருள் பெற்றனர்.
அதேபோல், சேலம், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், பூக்கள் அலங்காரத்தில் காட்சியளித்தார். காலை முதல், பக்தர்கள் வரிசையில் காத்திருந்து, கம்பத்துக்கு, மஞ்சள் நீரூற்றி, பூச்சூடி, மஞ்சள் கயிறு, வளையல் சகிதமாக பிரார்த்தனை செய்தனர். அம்மனுக்கு உகந்த ஆடியில் வழிபட்டால், நோய், நொடி நீங்கி, மழை வளம் பெருகி, அனைத்து செல்வங்களையும் ஒருசேர வழங்கி, பக்தர்களை மகிழ்வித்து, அம்மன் மகிமை அடைவார் என்பதால், கம்பத்துக்கு மஞ்சள் நீரூற்றி வழிபட்டதாக, பக்தர்கள் தெரிவித்தனர். மேலும், அஸ்தம்பட்டி மாரியம்மன், சமயபுரம் மாரியம்மனாக காட்சியளித்தார். மாலை, பெண்கள், 108 திருவிளக்கு வழிபாடு நடத்தினர். எல்லை பிடாரியம்மன், வெள்ளி கவச அலங்காரத்தில், தரிசனம் கொடுத்தார். அதேபோல, மாவட்டத்திலுள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களில், பக்தர்கள் கூட்டம், அலைமோதியது.