மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா துவக்கம்
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழா நேற்று (ஆக.,26) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா செப்.,12 நிறைவுறுகிறது. விழாவை முன்னிட்டு ஆக.,31 வரை கோயிலுக்குள் 2ம் பிரகாரத்தில் சந்திரசேகரர் உற்ஸவம் தினமும் இரவு 7:00 மணிக்கு நடக்கிறது. செப்., 1 கருங்குருவிக்கு உபதேசம் செய்தல், 2 ல் நாரைக்கு முக்தி கொடுத்தல், 3 ல் மாணிக்கம் விற்றது, 4 ல் தருமிக்கு பொற்கிழி அளித்தல், 5 ல் உலவாக்கோட்டை அருளியது, 6 ல் பாணனுக்கு அங்கம் வெட்டியது, 7 ல் வளையல் விற்றது ஆகிய திருவிளையாடல் லீலைகள், சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் செப்., 7 இரவு 7:35 மணிக்கு சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகமும் நடக்கிறது. செப்.,8 நரியை பரியாக்கியது, 9 ல் பிட்டுக்கு மண் சுமந்தது, 10 ல் விறகு விற்றது ஆகிய லீலைகள் நடக்கிறது. செப்.,11 காலை 9:25 மணிக்கு மேல் 9:59 மணிக்குள் சட்டத்தேர், இரவு 7:00 மணிக்கு ஆவணி மூல வீதி கீழபட்டமார் தெரு, வடக்கு மற்றும் கிழக்கு சித்திரை வீதிகள் வழியாக சப்தாவர்ண சப்பரத்தில் கோயில் சேருதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்துள்ளனர்.