திருத்தணி விநாயகர் சதுர்த்தி விழா: கோவில்களில் சிறப்பு பூஜை
திருத்தணி:விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பக்தர்கள் வழிப்பட்டனர்.நாடு முழுவதும் நேற்று 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
திருத்தணி ம.பொ.சி.சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவில், அரக்கோணம் சாலையில் உள்ள முக்கண் விநாயகர், சேகர்வர்மா நகரில் உள்ள சக்திவிநாயகர் கோவில், சித்துார் சாலையில் உள்ள விநாயகர் கோவில் உள்பட திருத்தணி நகரம் மற்றும் கிராமங்களில் உள்ள கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
அதே போல், திருத்தணி தாலுகாவில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் நகரத்தில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு வடிவத்தில் விநாயகர் சிலைகள், ஒரு அடி முதல், 15 அடி உயரமுள்ள சிலைகள் வைத்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடத்தி வழிப்பட்டனர்.
இரவு, விநாயகர் திருவீதியுலா நடந்தது. பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை, அருகம்புல், பொறி மற்றும் பழவகைகள் படைத்து வழிப்பட்டனர். பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், புளியோதரை, சர்க்கரை பொங்கல், சுண்டல், கேசரி போன்ற பிரசாதங்கள் வினியோகம் செய்யப்பட்டது. இதே போல், திருத்தணி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஓட்டி, 7 அடி உயரமுள்ள விநாயகர் சிலை வைத்து, சிறப்பு பூஜைகள் நடத்தி வழிப்பட்டனர்.
இரவு, 7:30 மணிக்கு விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதி வாசிகள் செய்திருந்தனர்.