உள்ளூர் செய்திகள்

வெற்றிக்கு தேவை

ஜூடோ பயிற்சியை பெற்று வந்தான் ஜான். ஆசிரியரிடம் அவன், ''நான் அனைத்தையும் கற்று விட்டேன்'' என்றான். அதற்கு அவர், ''எத்தனை பேர் வந்தாலும் உன்னால் வெற்றி பெற முடியுமா'' எனக் கேட்டார். ''நான் பலரையும் ஒரே சமயத்தில் வீழ்த்துவேன்'' எனச் சிரித்தான். ''உனக்கு பயிற்சி போதாது. இன்னும் நிறைய கற்க வேண்டும்'' என்றார். இதைக் கேட்டு வருந்திய அவன் மீண்டும் பயிற்சியை தொடர்ந்தான். ஆசிரியரிடம் அவன், ''தாங்கள் கூறியவாறு செய்தேன். என்னால் தற்போது பலரையும் ஒரே நேரத்தில் வீழ்த்த முடியும்'' என்றான். அதற்கு அவர் ''இன்னும் உனக்கு பயிற்சி தேவைப்படுகிறது'' என்றார். கோபப்பட்ட அவன், ''நான்தான் இரண்டு ஆண்டு பயிற்சி பெற்றுவிட்டேனே... மறுபடியும் எதற்கு?'' என்றான். ''எத்தனை ஆண்டு என்பது முக்கியம் அல்ல. திறமைதான் முக்கியம்'' என சொன்னார். மீண்டும் பயிற்சியை தொடர்ந்தான் ஜான். அப்போதுதான் ஒரு உண்மை புரிந்தது. ஆசிரியரிடம் வந்த அவன், ''ஒருவன் எப்படிப்பட்ட வீரனாக இருந்தாலும் அவனை வீழ்த்துவேன்'' என கூறினான். ''உன் பயிற்சி முடிந்தது. எந்த போட்டியாக இருந்தாலும், நீ சொன்ன பதில்தான் வெற்றிக்கு தேவை'' என்று அவனை வாழ்த்தி அனுப்பினார்.