உள்ளூர் செய்திகள்

தர்மத்தின் தலைவனாகுங்கள்!

பணத்தை கட்டிப்போட்டால் ஓரிடத்தில் முடங்கிக் கிடக்கும். அவிழ்த்து விட்டால், மனிதனை தவறான பாதையில் இழுத்துச் சென்று முடக்கி விடும். இதனால் உருப்படியான பயன் என்றால் ஒன்றே ஒன்று தான் உண்டு. பசியால் துடித்து உயிரை விடப்போகிறவனுக்கு பணம் உதவும். ஒரு ரூபாய் கிடைத்தால் போதும். ஒரு இட்லி வாங்கிச் சாப்பிட்டு, நிமிடத்தில் சாவின் விளிம்பில் இருந்து தப்பி விடுவான்.எல்லாவற்றையும் தர்மம் செய்துவிட்டால் எதிர்கால வாழ்விற்கு பணம் தேவைப்படுமே என்று இன்றைய அப்பத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பவனுக்கு இது தேவையில்லை தான்! ஆனாலும், தேவையானது போக மற்றதை தர்மம் செய்யலாம் இல்லையா?எனவே தர்மம் செய்வதில் இருந்து தப்பிக்க நினைக்கக்கூடாது. கல்வி, உணவு, ஆலயத்திருப்பணி உள்ளிட்ட புனித திருப்பணிகளுக்கு பணம் அவசியம் தேவை. பணக்காரர்கள் மட்டும்தான் தர்மம் செய்ய வேண்டுமென்பதில்லை. ஏழைகளும் செய்யலாம். இவர்கள், இலவசமாகக் கற்றுக் கொடுப்பது, முதியவர்களுக்காக கடையில் பொருட்கள் வாங்கிக் கொடுப்பது, மின்சார பில் கட்டிக் கொடுப்பது போன்ற சிறுஉதவிகளைப் பிறருக்காக செய்யலாம். இதுவும் தர்மமே.அளவுக்கு மீறிய பணஆசையே தேவனிடமிருந்து மனிதனைப் பிரித்து வைக்கிறது. அதற்கு இடம் தரக்கூடாது. நாம் என்ன நினைக்கிறோமோ அதுவே நமக்கு நடக்கும். என்ன செய்கிறோமோ அதுவே திரும்பக் கிடைக்கும். இதையே, ''உன்னுடைய விசுவாசத்தின் படியே உனக்கு ஆகக்கடவது,'' என்கிறது பைபிள்.எனவே பணத்தை பூட்டி வைக்காமல் தர்மம் செய்ய வேண்டும். அந்த தர்மமே உங்களை எப்போதும் காக்கும்.