சொர்க்கத்தில் அட்டைப்பெட்டி
'கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்' என்கிறார் இயேசு. ஆனால், சில சமயங்களில் கடவுளிடம் எவ்வளவு தான் ஜெபித்தாலும், பல விஷயங்கள் நிறைவேறாமல் போய் விடுகின்றன. காரணம் என்ன?ஒருவர் பரலோகத்திற்கு (சொர்க்கம்) சென்றார். அங்கே அரண்மனை போன்ற வீடுகளில் நிறைய வண்ண அட்டைப்பெட்டிகள் இருந்தன. அவற்றில் லேபிள் ஒட்டப்பட்டு, பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.சொர்க்கத்துக்கு சென்றவர் அங்கிருந்த தேவதூதரிடம்,''தூதரே! இந்த பெட்டிகளில் எல்லாம் பெயர் எழுதப்பட்டு தயாராக இருந்தும், ஏன் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படாமல் இங்கேயே இருக்கிறது?'' எனக் கேட்டார். அதற்கு தூதர், ''அன்பரே! இந்த பெட்டிகளில் எல்லாருக்கும் உரிய பலன்கள் வைக்கப்பட்டுள்ளன. ஜெபம் செய்யாதவர்களுக்கும், சுயநலத்துக்காக ஜெபம் செய்பவர்களுக்கும் இதிலுள்ள பலன் கிடைக்காது,''என்றார்.தூதர் சொன்னது போல, பலர் ஆண்டவரை நினைப்பதே இல்லை. நினைப்பவர்களோ சுயநல சிந்தனையுடன் உள்ளனர். பொதுநலம் கருதி எப்போது பிரார்த்தனை செய்யப்படுகிறதோ, அப்போதுதான் ஆண்டவர் கேட்டதைக் கொடுப்பார்.