வறுமையை சிலுவையில் அறைபவர்
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தான் எழுதிய 'எழுச்சி தீபங்கள்' என்னும் நூலை, பிளஸ்2 மாணவி சினேகர் தர்க்கர் என்பவருக்கு பரிசாக அளித்துள்ளார். அவர் கடந்தமாதம் குஜராத் சென்றிருந்த போது, கொடுத்த பரிசு இது! எதற்காக தெரியுமா?குஜராத்திலு<ள்ள, ஆனந்த் நகருக்கு அவர் வந்த போது, வகுப்புக்கலவரம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்நகரிலுள்ள ஆனந்தலயா உயர்நிலைப்பள்ளிக்கு கலாம் வந்தார். மாணவ மாணவிகளோடு கலந்துரையாடினார். ''இது போன்ற வகுப்புக்கலவரங்கள் நடக்கக் காரணம் என்ன? நமது பகைவன் யார்?'' என்ற கேள்வியை எழுப்பினர். பல மாணவிகளும் பல பதில்களைச் சொன்னார்கள் அப்போது மாணவி சினேகர் தர்க்கர் எழுந்து ஒரே வார்த்தையில் 'வறுமை' என பதிலளித்தார். வறுமை தான் பலவிதமான சமூக விரோத செயல்களுக்கு ஆணிவேராக இருப்பதை கண்டுபிடித்த அந்த மாணவிக்கு அவர் தனது புத்தகத்தைப் பரிசளித்தார்.உலகில் வறுமையின் காரணமாக தங்கள் உடமைகளையும், உடல் உறுப்புகளையும் பறிகொடுப்போர் ஏராளம். மேலும், அது பலரை விபச்சாரத்திலும், தீவிரவாதத்திலும், திருட்டிலும், பிச்சை எடுக்கவும் அது தள்ளி விடுகிறது. இனி வாழமுடியாது என்று தற்கொலை செய்வோரும் பெருகி வருகிறார்கள். கோடிக்கணக்கான குழந்தைகள் வேலைக்குப் போகிறார்கள். பலர் அனாதையாக உள்ளனர். இதையெல்லாம் கேள்விப்படும் போது நமது உள்ளம் கலங்குகிறது. இப்படிப்பட்டவர்கள், 'இயேசுகிறிஸ்து ஐஸ்வரியமுள்ளவராயிருந்தும் ஐஸ்வரியவான்களாக்கும்படிக்கு நம் நிமித்தம் தரித்திரரானார்' (2 கொரி 8:9) என்ற வசனத்தை நினைவில் கொள்ள வேண்டும்.நாம் வறுமையில் இருப்பதை இயேசு விரும்புவதில்லை. அவர் நம்மை ஆசிர்வதிக்கவே விரும்புகிறார். நம்முடைய வறுமைகளை அவர் சிலுவையிலே அறைந்து விட்டார். ''நான் ஒரு பாவி, என் பாவத்தை மன்னியும், என் வறுமையை மாற்றி ஆசிர்வதியும்,'' என்று சொல்லி அவரிடத்தில் பிரார்த்திக்கும் போது, நம்முடைய வறுமையை அவர் மாற்றித்தருவார். *கர்த்தர் எளியவனின் விண்ணப்பத்தைக் கேட்கிறார் (சங்60:33)* கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார் (சங்.72:12)* அவர் சிறியவனை புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார் (1 சாமு 2:8) என்ற வசனங்கள் மூலம், இயேசு வறுமையில் இருந்து மக்களைத் கைதூக்கி விடுபவர் என்பதை உணர்ந்து கொள்கிறோம்- தேவனின் வார்த்தை இதழிலிருந்து...