உள்ளூர் செய்திகள்

வேண்டாமே சந்தேகம்!

கணவன் மனைவி மீதும், மனைவி கணவன் மீதும் சந்தேகம் கொள்வது சில இடங்களில் வாடிக்கை. வீட்டுச்செலவு விஷயத்தில் கூட, இருவரும் ஒருவரை ஒருவர் சந்தேகப் படுவதுண்டு. ''இவர் வீட்டுக்கு தாமதமாக வருகிறாரே! குடிக்கிறாரோ! தகாத இடங்களுக்கு செல்கிறாரோ! இவரது உண்மையான சம்பளத்தை மறைக்கிறாரோ,'' என சந்தேகப்படும் மனைவியர் ஒருபுறம்.''இவள் நாம் கொடுக்கும் பணத்தை தாய் வீட்டுக்கு கொடுக்கிறாளோ! சகோதரர்களுக்கு உதவுகிறாளோ! நாம் இல்லாத நேரத்தில் இன்னொருவனுடன் பேசுகிறாளோ!'' இப்படி சந்தேகப்படுகின்றனர் சில கணவன்மார்.இவர்கள், சந்தேகத்தால் தங்கள் வாழ்க்கையை தாங்களே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதேபோல், சிலர், 'ஆண்டவர் நம் கோரிக்கையை ஏற்பாரோ, மாட்டாரோ' என சந்தேகப் படுகிறார்கள். இப்படி, சந்தேகத்துடன் கடவுளிடம் ஜெபிப்பதால் பலனில்லை.'' நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமாய் இருங்கள்'' என்கிறது பைபிள். கர்த்தரிடம் ஜெபிக்கும் போதானாலும் சரி, அவரது வாக்கை ஏற்றுக் கொள்ளும் போதானாலும் சரி, சந்தேகப்படாமல் விசுவாசிக்க வேண்டும். அப்போதுதான், நமக்கு அவரது ஆசிர்வாதம் கிடைக்கும்.