பயனற்ற போராட்டம் வேண்டாமே!
''நல்ல போராட்டத்தைப் போராடினேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்'' (2தீமோ.4:7)நான்கு திருடர்கள் ஒரு மாலை வேளையில், ஒரு பாதையின் வழியாக வரும்போது, வழியில் படுத்திருந்த ஒருவன் மேல் கால் இடறி கீழே விழுந்தார்கள். மரக்கட்டையை வழியில் போட்டு வைத்திருக்கிறார்களே என்றான் ஒருவன். அதைக் கேட்ட அந்த வழிப்போக்கனுக்கு கோபம் வந்தது. ''யோவ், என்னை மரக்கட்டை என்றா சொல்லுகிறாய்? எந்த மரக்கட்டையாவது மடியில் பணமுடிச்சை வைத்துக் கொண்டு தூங்குமா?'' என்று கேட்டான்.இதைக் கேட்டதும் திருடர்களுக்கு கொண்டாட்டம். அவனிடம் இருந்த பணத்தை பிடுங்க முயற்சித்தார்கள். அவனும் விடவில்லை. நான்கு பேரையும் எதிர்த்து போராடினான். பல மணிநேரம் மிகுதியான போராட்டம். கடைசியில் வழிப்போக்கனை கட்டிப் போட்டு நான்கு பேரும் அவனிடத்தில் இருந்த பணத்தைத் தேடினார்கள். அங்கே இருந்தது எவ்வளவு தெரியுமா? வெறும் ஐம்பது காசு மட்டுமே. அவர்களுக்கு எரிச்சலும் ஏமாற்றமுமாக இருந்தது!இதுவும் ஒரு போராட்டம் தான். ஆனால், பயனில்லாத போராட்டம். அநேகர் இப்படித்தான், உலகப் பொருளுக்காக, உலகப் பதவிகளுக்காக, உலக மேன்மைகளுக்காக பயனற்ற வழியில் போராடுகிறார்கள். இவைகளெல்லாம் பயனற்றவை, அநித்தியமானவை, அழிவுக்குரியவை.அப்போஸ்தலர் பவுல், தனது விசுவாசப் போராட்டத்தின் முடிவைக் குறித்து சொல்லுகிறார்.''இந்த நல்ல போரட்டத்தின் முடிவு நித்திய ஜீவன், மட்டுமல்ல, பரலோக ராஜ்யத்தின் பாக்கியம், பரலோக வாசஸ்தலம், ஒளியிலுள்ள பரிசுத்தவான்களின் சுதந்திரம், எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்துவோடு கூட என்றென்றும் வாழுகிற இணையற்ற இனிமையான வாழ்க்கை'' என்று. நாம் நல்லதற்காக போராடுவோம். நல்லதையே நினைப்போம்.