கொடுங்கள் கொடுக்கப்படும்!
கோழி ஒரு முட்டையிட்டு விட்டால், 'நான் ஒரு முட்டையிட்டேன்' என்று தன் பாஷையில் எகிறிக் குதித்து, உலகிற்குப் பறை சாற்றும். ஆனால், யானை குட்டி போட்டால், அமைதி காத்து நிற்கும். அனேக மக்கள், இந்தக் கோழியைப் போன்று ஊழியத்திற்கோ, ஊழியருக்கோ, வேறு யாருக்குமோ எதையாகிலும் செய்து விட்டால், 'நான் தான் கொடுத்தேன்' என்று விளம்பரப்படுத்தி மகிழ்வார்கள். அவர்கள், 'அதன் பயனை அடைந்து தீர்த்தாயிற்று' என்று இயேசு கூறியிருக்கிறார்.நாம் செய்யும் நன்மைகள் பிறர் அறியாத விதத்தில் ரகசியமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், நாம் இம்மையிலும் மறுமையிலும் பிரதிபலன் பெற்று வாழலாம். ஒரு தேவபிள்ளை தனக்கு வரும் வருமானத்தின் ஒரு பகுதியைத் தான், ஆராதிக்கும் சபையில் தசமபாகமாக செலுத்த வேண்டும். மேலும், ஒரு பகுதியினை தேவையில் இருக்கும் பிற ஊழியங்களுக்கோ, சக விசுவாசிகளுக்கோ, ஏழைகளுக்கோ வழங்க வேண்டும். நம்மைத் தேடி வருபவர்களுக்கு மட்டுமில்லாமல், வாய் திறந்து கேட்க கூச்சப்பட்டு தங்களுக்குள்ளே வாடும் மக்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுலைத் தேடிச் சென்று, உதவிகள் புரிந்து வந்த ஓநோசிப்போருவின் வீட்டாருக்காக தேவனிடத்தில் பவுல் மன்றாடுகிறான். (2தீமோ.1: 16-18) பிலிப்பிய சபையார் பவுலுக்கு அனுப்பிய உதவியை பெற்றுக் கொண்டு, அவர் பிலிப்பிய சபையை மனமார வாழ்த்துகிறார். ''உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும், தேவனுக்குப் பிரியமான உகந்த பலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையால் வரப் பெற்றுக் கொண்ட படியால், நான் திருப்தி அடைந்திருக்கிறேன். என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்(பிலி.4:18,19)நாம் பிறருக்கு கொடுப்போம்... மேன்மைகளின் அனுபவத்தை பெற்றுக் கொள்வோம். தேவன் அருள்புரிவாராக.