இதோ இன்று ஒரு செய்தி!
ஒரு சிறுவன் ஆடுகளை மேயவிட்டு கண்காணித்துக் கொண்டிருந்தான். அது ஒரு ஓய்வுநாள். காலைவேளை. ஆலயத்தின் மணியோசை அவன் காதுகளில் விழுந்தது. அந்த மேய்ச்சல் தளத்தை ஒட்டிய பாதையில், மக்கள் ஆலயத்திற்கு சென்று கொண்டிருப்பதைக் கவனித்தான். அந்தக்காட்சி அவனது சிந்தனையை முடுக்கி விட்டது.''எனக்கு ஆலயத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லையே! நான் தேவனோடு பேச விரும்புகிறேன். ஆனால், அவரிடத்தில் என்ன சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியாதே!'' என்று எண்ணினான்.அவனுக்கு படிப்பறிவு இல்லை என்பது மாத்திரமல்ல, அவன் ஜெபிக்கவும் கற்றுக்கொள்ளவில்லை. அவனுக்கு தெரிந்தது ஏ,பி.சி,டி மட்டுமே..! அன்று அவனுக்கு ஜெபிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.அவன் ஒரு புதருக்கு பின்னால் சென்றான். முழங்காலிட்டு, கண்களை மூடி, கரங்களைக் குவித்து தனக்குத் தெரிந்த 'ஏ,பி,சி,டி... என 'இசட்' வரை உள்ள அடிப்படை எழுத்துக்களை மட்டும் திரும்பத்திரும்ப சத்தமாக உச்சரித்துக் கொண்டே இருந்தான்.அவ்வழியாகச் சென்ற ஒருவரது காதில் அது விழுந்தது.''தம்பி! நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?''''ஐயா! நான் ஜெபித்துக் கொண்டிருக்கிறேன்,''.''அப்படியானால், ஏன் அடிப்படை எழுத்துக்களை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறாய்?''அதற்கு அவன் சொன்ன பதில் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.''ஐயா! எனக்கு ஜெபிக்கத் தெரியாது. ஆனாலும், தேவன் என்னைப் பராமரித்து உதவி செய்ய வேண்டும். என் ஆடுகளுக்கு தொற்றுநோய் வரவிடாமல் பாதுகாக்க வேண்டும். ஆகவே, எனக்குத் தெரிந்த ஜெபத்தை ஏறெடுக்கிறேன். இப்படிச் செய்வதால், ஆண்டவர் நான் உச்சரித்த எழுத்துக்களிலிருந்து அவரே வாக்கியங்களை உருவாக்கிக் கொண்டு என் விருப்பத்தின்படி செய்வார்,'' என்று நம்பிக்கையுடன் சொன்னான்.அதைக்கேட்ட அந்த மனிதர்,''ஆண்டவர் நீ விரும்பியபடி செய்வார்,'' என புன்முறுவலுடன் சொல்லிவிட்டு ஆலயத்திற்குச் சென்றார். இதுவே, அன்று ஆண்டவன் தனக்கு அளித்திருக்கும் தேவசெய்தி என்று எடுத்துக்கொண்டார்.''ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். இவைகளை யெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள். இவைகளெல்லாம், உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்'' (மத்.6:31,32) என்ற வசனத்தை நினைவில் வையுங்கள்.