உள்ளூர் செய்திகள்

இதோ இருக்கிறது மகிழ்ச்சி

குடிப்பவர்களில் பெரும்பகுதியினரை ஒரு காலத்தில் கேட்ட போது, ''என் மனதில் தீராத கவலை ஏற்பட்டுள்ளது. அதை மறக்கவே குடிக்கிறேன்,'' என்றார்கள். இன்று வளர்ச்சி பெற்ற பொருளாதாரத்தின் காரணமாக குடிப்பவர் எண்ணிக்கை பெருகியுள்ளது. அவர்களிடம் 'ஏன் குடிக்கிறீர்கள்?' என்றால் 'சந்தோஷத்தைக் கொண்டாட குடிக்கிறோம், டென்ஷனைக் குறைக்க குடிக்கிறோம்,'' என்கிறார்கள். ஒரு திருவிழா வந்து விட்டால், எது இருக்கிறதோ இல்லையோ, குடி இருக்கிறது.குடிப்பவர்கள் சொல்லும் இந்த இரண்டு காரணங்களுமே தற்காலிக சந்தோஷத்தை தரலாம். ஆனால், இவர்கள் இறுதியில் ஆஸ்பத்திரிக்கு தான் போகிறார்கள். 'குடல் போச்சு. இதயம் போச்சு. சிறுநீரகம் போச்சு' என்று கதறுகிறார்கள். இதெல்லாம் தெரிந்தும் மற்றவர்கள் குடிக்கிறார்கள். மகிழ்ச்சி என்ற பெயரில் சிரமத்தை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.ஒரு சிலர் சினிமா, 'டிவி', இன்டர்நெட்டில் ஆபாச நிகழ்ச்சிகளை சந்தோஷம் தருவதாக நினைத்து பார்க்கிறார்கள். இவை கலாசார சீர்கேடு என்னும் கொடிய கேட்டை உண்டாக்குகிறது. ஆனால், மெய்யான சந்தோஷம் பற்றி பைபிள் வசனம் விளக்குகிறது.'மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை (இருதயம்) ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்' என்பதே அவ்வசனம். இவ்வசனத்திலுள்ள நல்வார்த்தை என்பது ஆண்டவருடைய கட்டளைகளைக் குறிப்பிடுகிறது.'அந்த வார்த்தை மாம்சமாகி (மனித வடிவம்), கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம் பண்ணினார்' என்ற வசனமும், 'அவர் தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. வார்த்தையாகிய இயேசுகிறிஸ்துவே மெய்யான சந்தோஷத்தை, மகிழ்ச்சியைத் தர முடியும்' என்ற வசனமும் இதை உறுதி செய்கின்றன.ஆம்.. கர்த்தரின் கட்டளையை மதியுங்கள். சம்பாதிப்பதில் பெரும் பகுதியை, நன்மைக்காக செலவிடுங்கள். ஏழைகளைக் கை தூக்கி விடுங்கள். மகிழ்ச்சியை இறைவழியில் தேடுங்கள்.