கலங்காதிரு மனமே!
உலகம் எங்கும் ஆறுதல் தேடி அலைந்து திரியும் மக்கள் ஏராளம். அதனால் தான், இந்தக் கடைசி நாட்களில் சபைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அங்கே விசுவாசிகள், போதகர், கிறிஸ்துவோடு ஒரே சரீரமாய் இணைக்கப்படுகிறார்கள். ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கிறார்கள். ஆதலால், அங்கே ஆறுதல் காணப்படுகிறது. யோபு ஆறுதல் இல்லாமல் தவித்தார். நண்பர்கள் வந்ததும் யோபு சந்தோஷப்பட்டார். ஆனால், எந்த ஆறுதலும் கிடைக்கவில்லை. காரணம், வந்த நண்பர்கள் வாய்க்கு வந்தபடி பேசினார்கள். அவை சத்தியத்தை மறைக்கும் உபயோகமில்லாத வார்த்தைகள்.அதனால் தான் தேவன் சொல்கிறார்.. 'உன் சிநேகிதர்கள் மேல் எனக்கு கோபம் வருகிறது' என்று. தீர்க்கதரிசனமே உங்களுக்கு ஆறுதல் கொடுக்கும். அதனால், நாம் தீர்க்க தரிசனத்தை விரும்புவோம். அவைகளை கேட்க ஏக்கத்தோடு இருப்போம். அப்போது கர்த்தர் பேசுவார். உங்களுக்கு ஆறுதல் வரும். யோவான் 14ம் அதிகாரத்தில், இயேசுவின் தீர்க்க தரிசன வார்த்தைகள் வெளிப்பட்டன.* உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. நான் திரும்ப வருவேன். (யோவான் 14:1) * என் நாமத்தினால் என்ன கேட்டாலும் அதைத் தருவேன்'. (யோவான் 14:14)* உங்களை திக்கவற்றவர்களாக விட மாட்டேன். ஆறுதலான, இந்த தீர்க்க தரிசன வார்த்தைகள் ஒவ்வொன்றும், தாய் நம்மைத் தேற்றுவதைப் போல ஆறுதல்படுத்துகிறது.