உள்ளூர் செய்திகள்

சின்ன இயேசு பாலா! உன் சின்ன பாதம் பணிகிறோம்!

டிச. 25 கிறிஸ்துமஸ்இன்று விழாக்கள் ஆடம்பரமும், கோலாகலமும் கொண்டதாக மாறிவிட்டன. ஆனால், அந்நாளில் கிறிஸ்துமஸ் என்றால், அது அர்த்தமுள்ளதாக, நாலு பேருக்கு நன்மை செய்வதாக அமைந்தது.டாக்டர் எட்வர்ட் லிவிஸ்டன் என்பவர் காசநோயால் சிரமப்பட்டார். ஓய்வெடுத்தால் இந்நோய் வேகமாக குணமாகும் என்பதை தன் அனுபவம் மூலம் உணர்ந்த அவர், ஒரு மலை அருகில் இருந்த தன் வீட்டையே வைத்தியசாலை ஆக்கி நோயாளிகளைக் குணமாக்கினார். அதுமட்டுமல்ல, நிதி திரட்டி புதிய கட்டடங்களையும் கட்டி நோயாளிகளுக்கு உதவினார்.ஒருவர் வழிகாட்டினால் போதாதா! மற்ற டாக்டர்களும் இதேபோல பல வைத்தியசாலைகளை நிறுவினர். இந்நிலையில், அமெரிக்காவில் 1904ல் நுரையீரல் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் ஸ்டாம்ப் வெளியிட்டு, அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் காசநோயாளிகளுக்கு உதவ திட்டமிடப்பட்டது. போதுமான தகவல் தொடர்பு இல்லாததால் 300 டாலர் மட்டுமே நிதி கிடைத்தது. முதலில் 50ஆயிரம் ஸ்டாம்புகளும், 2000 அஞ்சல் உறைகளுமே வெளியிடப்பட்டன. ஆனால், இதுபற்றி ஒரு பத்திரிகை செய்தி வெளியிட, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டது. இதையடுத்து 2.5லட்சம் ஸ்டாம்புகள் விற்றுத் தீர்ந்தன. 3000 டாலர் சேர்ந்தது. ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டும் இந்த திட்டத்தை வரவேற்றார்.அமெரிக்க செஞ்சிலுவை சங்கமும் 1920ல் ஸ்டாம்ப் வெளியிட்டது. அவற்றில் சிவப்பு குறுக்குகோடுகள் கொண்ட சிலுவை அச்சிடப்பட்டிருந்தது.பார்த்தீர்களா! கிறிஸ்துமஸ் பண்டிகையின் பெயரில் வெளியான ஸ்டாம்புகளுக்கு கிடைத்த வரவேற்பை! இந்த நிதிமூலம் எத்தனையோ நோயாளிகள் குணமாயினர்.அது மட்டுமல்ல! கிறிஸ்துமஸ் என்பது டிச.25ல் மட்டுமல்ல. அது தினமுமே கொண்டாடப்பட வேண்டும். கிறிஸ்து+மாஸ் என்பதே கிறிஸ்துமஸ் ஆனது. 'மாஸ்' என்றால் 'மிகப்பெரிய, மிக நீண்ட' என்ற அர்த்தத்தில் வரும். 'ஆராதனை' என்றும் பொருள்படும். ஆம்...கிறிஸ்துமஸை ஒரே நாளுடன் நிறுத்தி விடாமல், தேவனை தினமும் ஆராதிக்க வேண்டும். அவர் சொன்ன அன்பு வழியை 365 நாட்களுமே கடைபிடிக்க வேண்டும். உண்மைக் கிறிஸ்தவனின் உள்ளத்தில், ஒவ்வொரு நாளும் கிறிஸ்துபிறப்பின் நினைவு தொடர்ச்சியாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும், இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் பொதுப்பணி ஒன்றைத் துவக்குங்கள். நாலுபேருக்கு பயன்படும் விதத்தில் அதைச் செயல்படுத்துங்கள். இயேசுவின் கொள்கைகளை எந்தச் சோதனை வந்தாலும் கடைபிடியுங்கள். இவ்வாறு செய்தால், சின்ன இயேசு பாலகனின் திருவடி நிழலில் இளைப்பாற ஏதுவாக இருக்கும்.