அன்பு பயப்படாது!
குடும்பப்பகை, நண்பர்களுக்குள் கருத்துவேறுபாட்டால் ஏற்பட்ட பகை, அலுவலகத்தில் சக ஊழியர் செய்த கெடுதியினால் ஏற்பட்ட பகை, ஏன்... நாம் நல்லதைச் செய்தும், ஆண்டவர் நம்மை சோதித்தார் என்பதற்காக, அவரிடமே கொண்ட பகை...எதுவாக இருக்கட்டுமே! அதை விட்டுவிட்டு அவர்களிடம் நேசம் கொள்ளுங்கள்.ஒரு சிறுவனை பாம்பு தீண்டிவிட்டது. அவன் இறந்து விட்டான். சிறுவனின் தந்தைக்கு பாம்பின் மீது கடும் கோபம். அதைக் கொல்வதற்காக, கோடரியுடன் பாம்புப் புற்றின் அருகே காத்திருந்தார். பாம்பு வெளியே வந்தது. அதை வெட்டினார். குறிதவறி பாம்பின் வால் மட்டும் அறுபட்டது. பாம்பு தப்பி புற்றுக்குள் சென்று விட்டது. அடிபட்ட பாம்பு பழிவாங்கிவிடுமே என நினைத்த அந்த மனிதர், பாம்புடன் இனி சிநேகம் கொள்வதே நல்லதென நினைத்தார். பாம்பைச் சரிக்கட்ட புற்றின் முன்னால் பால் கிண்ணத்துடன் காத்திருந்தார்.பாம்பு வெளியே வந்தது. ''மனிதனே! தீண்டுவது எனது இயல்பு. அதன்படியே உன் மகனைத் தீண்டினேன். ஒருவர் ஒரு தீங்கு செய்து விட்டார் என்பதற்காக, அவரைப் பழிவாங்கத் துடிப்பது தவறு. பகைவரிடமும் நேசம் கொள். அன்பு என்றுமே பயப்படாது,'' என்றது.''நேசத்தில் பயம் என்பதே இல்லை. பரிபூரணமான நேசம் பயத்தைப் புறம்பாக்கி விடுகிறது. பயம் வேதனையுள்ளது. ஆகையால், பயப்படுகிறவன் நேசத்துக்கு பூரணமானவனல்ல'' என்கிறது பைபிள்.