பகைவரையும் நேசிப்போம்!
ஒருவர் நமக்கு தீங்கிழைக்கும் போது, பதிலுக்கு ஏதாவது செய்து விட வேண்டும் என்ற எண்ணம் வருவது இயல்பு. ஆனால், இப்படி செய்வதால் அவருக்கு எந்த வித பலனும் ஏற்படப் போவதில்லை. பழி வாங்கும் உணர்வின் உந்துதலுக்கு நாம் எக்காரணம் கொண்டும் கீழ்படியக்கூடாது.''கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல் (யாத்.21:24, லேவி.24:2)) என்று கூறப்படுவதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன். தீயவனை எதிர்க்காதீர்கள். ஒருவன் உங்கள் வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு உங்கள் மறு கன்னத்தையும் காட்டுங்கள். மேலாடைக்காக ஒருவன் உங்கள் மீது வழக்கு தொடர்ந்தால், அவனுக்கு உங்கள் சட்டையையும் கொடுத்து விடுங்கள். ஒரு படைவீரன் உங்களை ஒரு மைல்தூரம் நடக்க வற்புறுத்தினால் நீங்கள் அவனுடன் இரண்டு மைல்தூரம் நடந்து செல்லுங்கள். ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால், அவனுக்கு அதைக் கொடுத்து விடுங்கள். உங்களிடமிருந்து கடன் கேட்கிறவனுக்குக் கொடுப்பதற்கு மறுக்காதீர்கள்,''. இது ஆண்டவர் தனது பிரசங்கத்தில் பழிவாங்குதல் பற்றி கூறியதாகும். ''பிரியமானவர்களே! பழிவாங்குதல் எனக்குரியது. நானே பதிற்செய்வேன்''(2பா.32:35) என்று கர்த்தர் சொல்லுகிறார். அதாவது, தவறு செய்தவர்க்கு தண்டனை கொடுக்கும் உரிமை கடவுளுக்கு மட்டுமே உரியது. அந்த அதிகாரத்தை நாம் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது.'நீங்கள் பழிவாங்காமல் கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்''(ரோம.12;19, எபி.10:30) என்று வேதம் கூறுகிறது.பிறருக்கு தீங்கு செய்து அதில் இன்பம் காண்கிறவர்களை கர்த்தர் பார்த்துக் கொள்வார். நாம் எதிரிகளையும் நேசித்து அன்பு காட்ட வேண்டும். அவர் நம்மை நேசித்தது போல, நாமும் ஒருவருக்கொருவர் நேசிக்க வேண்டும். பாவத்தை தான் வெறுக்க வேண்டுமே தவிர, பாவியை வெறுக்கக்கூடாது. தீயவனுக்கும் நன்மை செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் ஸ்ரீசந்தோஷமான வாழ்வு என்பதில் சந்தேகம் வேண்டாம்.''இறைவனின் அன்பை இருதயத்தில் நேசிப்பவர்கள், மனிதர்களின் பகைமைகளால் மனம் கசந்து போவதில்லை''. இந்த வரி மனதில் இருந்தால் பழிவாங்கும் உணர்வு வராது.