கவலையே இல்லாமல் இருக்க என்ன வழி?
கடும் வெயில் காலத்தில் மலைப்பிரதேசங்களில் உள்ள கோடைவாச ஸ்தலங்களுக்கு போய் சில நாட்கள் ஓய்வு எடுப்பது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். அங்கே செல்வதால், வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்வதுடன், இயற்கை காட்சிகளைக் கண்டுமகிழும் வாய்ப்பும், அதன் காரணமாக நமது கவலைகளையெல்லாம் மறக்கின்ற சூழ்நிலையும் உருவாகும்.நியூசிலாந்து நாட்டில் குவின்ஸ் டவுன் என்ற நகரம் உள்ளது. இது மலை உச்சியில் உள்ள நகரமாகும். சுற்றுலா பயணிகள் அங்கே ஒரு வித்தியாசமான அறிவிப்பு பலகையைக் காணலாம். 'குவின்ஸ் டவுன் உங்களை வரவேற்கிறது. நீங்கள் கவலை மட்டத்தில் இருந்து ஆயிரம் அடி மேலே இருக்கிறீர்கள்'' என்ற இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அதாவது, எல்லா மனிதர்களும் கவலைப்படுகிறார்கள். இந்த சுற்றுலா தலத்திற்கு வந்தால்கவலைகளை மறந்து மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் இந்த பலகை வைக்கப்பட்டிருக்கிறது.இந்த சுற்றுலா தலத்தைவிட்டு கீழே இறங்கியதும் மீண்டும் நமது பணிகளில் ஈடுபடுவோம். கவலைகள் மீண்டும் தொற்றிக் கொள்ளும். ஆனால், நிரந்தரமாக கவலையே படாமல் இருக்க வேண்டுமானால் என்ன செய்வது? இதற்கு பதில் சொல்கிறது பைபிள்.''உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள்,'' என்று பைபிள் நமக்கு கற்றுத்தருகிறது. கர்த்தரிடம் கவலைகளை ஒப்படைத்து விட்டால், அதை மறப்பதற்கு எந்த இடத்தையும் தேடி அலைய வேண்டியதில்லை. நமது கவலைகளை அவரே ஏற்றுக்கொள்வார். எங்கிருந்தாலும் நாம் கவலையற்று வாழமுடியும்.