சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
திருக்கார்த்திகை என்றதும் திருவண்ணாமலைதான் நம் நினைவிற்கு வரும். இதற்கு காரணம் இங்குள்ள மலை. மற்ற கோயில்களில் சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி தருவார். ஆனால் இங்கு மலையையே லிங்கமாக கொண்டுள்ளார். இதுமட்டுமல்ல. இத்தலம் பல சிறப்புகளை கொண்டுள்ளது. * பஞ்சபூதத்தலங்களில் அக்னித்தலம் இது. * 'நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை' என பெயர் பெற்றது. * பார்வதிக்கு தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து சிவபெருமான் ஜோதி ஸ்வரூபமாய் காட்சி தந்த தலம். * முருகனடியாரான அருணகிரிநாதர் பிறந்து வாழ்ந்து முக்தி அடைந்த தலம். * 9 கோபுரங்கள், 7 பிரகாரங்கள், 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 துாண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், 43 செப்புச்சிலைகளையும் கொண்டு தென்னிந்தியாவிலேயே 2வது உயரமான கோபுரம் (217 அடி) கொண்ட தலம்.* கோயிலின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. * ஆறாம் நுாற்றாண்டில் கட்டப்பட்டு மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய அரசர்களாலும் வைசாள அரசர்களாலும் பல்வேறு காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. * சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகரிஷி, விசிறி சாமியார் போன்ற எண்ணற்ற ஞானிகள் இங்கு வாழ்ந்தும் முக்தியும் அடைந்திருக்கிறார்கள். * அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது அருணை சக்தி பீடம். இங்குள்ள 'அல்லல் போக்கும் விநாயகர்' சன்னதி விநாயகரின் முதல் படைவீடாகும். * 'அண்ணுதல்' என்றால் நெருங்குதல் என்றும், 'அண்ணா' என்றால் நெருங்கவே முடியாது என்றும் பொருள். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது. * உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இம்மலை உள்ளது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், தற்போது கலியுகத்தில் கல்மலையாகவும் உள்ளது. * காந்த சக்தி அதிகம் இருப்பதால் இம்மலை 'காந்தமலை' என்றும் அழைக்கப்படுகிறது. * இம்மலையைச் சுற்றி கிரிவலம் செல்லும் போது ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு லிங்கம் என எட்டுதிசைகளுக்கு எட்டு லிங்கங்களை தரிசிக்கலாம். 1. இந்திர லிங்கம்2. அக்னி லிங்கம் 3. எமலிங்கம்4. நிருதிலிங்கம் 5. வருணலிங்கம்6. வாயுலிங்கம் 7. குபேரலிங்கம்8. ஈசானலிங்கம்* கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது. மலைமீது தீபம் ஏற்றும்முன் இங்குதான் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். இம்மண்டபத்தை மங்கையர்க்கரசியார் 1202ம் ஆண்டில் எழுப்பினார். இதனால் மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் இதை சொல்வர். * கோயிலில் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் என நுாற்றுக்கணக்கான கல்வெட்டுகள் பல உண்மைகளை புலப்படுத்துகின்றன. * இதிகாச காலத்தில் மகிழம் மரத்தடியில் சிவபெருமான் சுயம்புலிங்கமாக தோன்றினார். இதனால் இங்கு மகிழ மரம் தல விருட்சமாக உள்ளது. * அனுமனுக்கு செந்துாரம் பூசி அலங்கரிப்பதுபோல் இங்குள்ள விநாயகருக்கும் செந்துாரம் சாத்துகின்றனர். சம்பந்தாசுரனை விநாயகர் வதம் செய்தபோது, அவனது ரத்தத்தில் இருந்து பல அசுரர்கள் உருவாகினர். இதனை விநாயகர் தனது உடலில் பூசிக்கொண்டார். இதனால் சித்திரை மாதப்பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை, தை மாதத்தில் ஒருநாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கும் செந்துாரம் சாத்தப்படுகின்றது.