உள்ளூர் செய்திகள்

நீ நடந்தால் நடையழகு...

விழா காலங்களில் சுவாமியை வாகனம்,அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தின் மீது எழுந்தருளச் செய்வர். அனைவரும் தரிசிக்க வேண்டும் என்ற நோக்கில் சுவாமியை வீதியில் சுமந்து வரும் பணியை செய்பவர்களுக்கு ''சீர்பாதக்காரர்கள், தோளுக்கினியான், ஸ்ரீபாதம் தாங்கிகள்'' என அழைப்பர். விழாக்காலங்களில் வீதிகளில் சுவாமியை சுமந்து வரும் அழகே தனி அழகு. ஒவ்வொரு இடத்திற்கும் சுவாமி வருவதற்கு பெயர் வைத்துள்ளார்கள் அது என்ன என பார்ப்போம். * திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெருமாள் புறப்பாட்டின் ஆரம்பம், ஒரு கருடன் சட்டென்று சிறகை விரித்து எப்படி பறக்குமோ அது போல இருக்கும் இதனை கருட கதி என்பர். * ஒரு சிங்கம் குகையில் இருந்து வெளிவரும் போது இரு பக்கங்களும் தலையை லேசாக திருப்பி பார்த்து நடந்து வரும் அது போல ஸ்ரீபாதம் தாங்கிகள் பெருமாளை தோளில் சுமந்து கொண்டு புறப்படுவார்கள் இதனை சிம்ம கதி என்பர். * அதனை அடுத்து இரண்டு மூன்று அடிகள் எடுத்து வைப்பதும் பின்னர் நிறுத்துவதும் அடுத்து புறப்படுவதை வியாக்ர கதி என்பர். * காளை மாடு போல மணியோசையுடன் மேளவாத்தியங்கள் முழங்க பெருமாள் நடப்பதை ரிஷப கதி என்றும், இசைக்கு ஏற்றார் போல அசைந்து அசைந்து ஆண் யானை நடந்து வருவது போல வருவதை கஜ கதி என சொல்லுவர். * புறப்பாடு முடிந்து திரும்பி வந்து கருவறைக்கு செல்லுவதை எப்படி ஒரு பாம்பு புற்றுக்குள் நுழையும் முன்பு தலையை துாக்கிப் பார்த்துவிட்டு பாம்பு புற்றினுள்ளே நுழையுமோ அவ்விதம் நுழைவதை ஸ்ர்ப்ப கதி என்பர். கடைசியாக, எப்படி ஒரு அன்னப் பறவை தன் சிறகை சட்டென மடித்துக்கொண்டு உட்காருமோ அப்படி உள்ளே நுழைந்த பெருமாளை அமர வைப்பதை ஹம்ச கதி என்பர். விழாக்காலங்களில் சுவாமியை சுமப்பவர்கள் இத்தகைய பணியில் ஈடுபடுவர். இவர்களுக்கு கடுமையான பயிற்சி அளித்த பிறகே இதில் பங்கேற்பார்.