குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
குன்றம் எறிந்தாய்! குரைகடலில் சூர் தடிந்தாய்! புன் தலைய பூதப் பொரு படையாய்! - என்றும் இளையாய்! அழகியாய்! ஏறு ஊர்ந்தான் ஏறே! உளையாய்! என் உள்ளத்து உறை.குன்றம் எறிந்ததுவும், குன்றப் போர் செய்ததுவும், அன்று அங்கு அமரர் இடர் தீர்த்ததுவும், இன்று என்னைக்கைவிடா நின்றதுவும், கற்பொதும்பில் காத்ததுவும்,மெய் விடா வீரன் கை வேல்! வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்துளைத்த வேல் உண்டே துணை. இன்னம் ஒரு கால், எனது இடும்பைக் குன்றுக்கும்,கொல் நவில் வேல் சூர் தடிந்த கொற்றவா! - முன்னம் பனி வேய் நெடுங் குன்றம் பட்டு உருவத் தொட்ட தனி வேலை வாங்கத் தகும். உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்; பின்னை ஒருவரை யான் பின்செல்லேன்- பன்னிரு கைக் கோலப்பா! வானோர் கொடிய வினை தீர்த்தருளும் வேலப்பா! செந்தி வாழ்வே! அஞ்சும் முகம் தோன்றின், ஆறுமுகம் தோன்றும்; வெஞ் சமரில் 'அஞ்சல்' என வேல் தோன்றும்; - நெஞ்சில்ஒரு கால் நினைக்கின், இரு காலும் தோன்றும் 'முருகா!' என்று ஓதுவார் முன். முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன் மருகனே! ஈசன் மகனே! - ஒரு கை முகன் தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்.காக்கக் கடவிய நீ காவாது இருந்தக்கால், ஆர்க்குப் பரம் ஆம் அறுமுகவா! - பூக்கும் கடம்பா! முருகா! கதிர் வேலா! நல்ல இடம்காண்; இரங்காய் இனி! பரங்குன்றில் பன்னிரு கைக் கோமான்தன் பாதம் கரம் கூப்பி, கண் குளிரக் கண்டு - சுருங்காமல், ஆசையால், நெஞ்சே! அணி முருகு ஆற்றுப்படையைப் பூசையாக் கொண்டே புகல். நக்கீரர்தாம் உரைத்த நல் முருகு ஆற்றுப்படையை தற்கோல, நாள்தோறும் சாற்றினால், - முன் கோலமா முருகன் வந்து, மனக் கவலை தீர்த்தருளி, தான் நினைத்த எல்லாம் தரும்.