உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம் - வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.

** ருத்ராட்சம் அணிய வேண்டிய விதிமுறைகள் யாவை? ப.வினோத், புதுச்சேரி.விபூதியும், ருத்ராட்சமும் சைவ சமயத்தின் உயர்ந்த சின்னங்கள். சிவனடியார்கள் இவ்விரண்டையும் தம் இரு கண்களாகப் போற்ற வேண்டும். இரண்டுமே சிவபெருமானுடைய அம்சங்கள். எனவே, இறைவன் சன்னதியில் எப்படி பயபக்தியுடன் இருக்கிறோமோ, அதுபோல ருத்ராட்சம்  அணிபவர்கள் பய பக்தியுடனும், ஆசாரத்துடனும் இருக்க வேண்டும். முன்பெல்லாம் தீட்சை பெற்று அனுஷ்டானம் செய்பவர்கள் மட்டும் இதை அணிவது என்று இருந்தது. தற்காலத்தில் ஒரு அணிகலன் போல் எல்லோரும் விரும்பி அணிகிறார்கள். அணிபவர்கள் எல்லோரும் நல்ல பழக்கங்களுக்கு மாறிவிட்டால் நாட்டுக்கு நன்மை தானே!.*கோயிலில் பிரசாதமாகப் பெறும்  பூமாலையை வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு அணிவிக்கலாமா?  ஆர்.நடராஜன், சென்னை.சுவாமிக்குச் சாத்திய பிறகு எடுக்கப்படும் பூமாலை நிர்மால்யம் எனப்படும். இறைவனின் திருவருட் பிரசாதமாக நமக்குக் கிடைத்ததை மீண்டும் சுவாமி படங்களுக்கு சாத்தக்கூடாது. ஆனால், முன்னோர்களின் படங்களுக்குச் சாத்தலாம். இதில் தவறில்லை. வீட்டில் உள்ள எல்லோருக்கும் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். பெண்கள் தலையில் சூடிக்கொள்ளலாம். * 'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்று ஞானிகள் சொல்லும் பொழுது ஆலய தரிசனம் தேவையா? வி.பரமு, சென்னை.கோயிலுக்குப் போகாமல் இருப்பதற்கு என்னென்ன காரணங்களையெல்லாம் கண்டு பிடிக்கிறீர்கள்? திருமூலர் அருளிய இப்பாடல்  தவவாழ்க்கையை மேற்கொண்டிருக்கும்  ஞானிகளின் இலக்கணத்தை நமக்குக் கூறுகிறது. பாடலை முழுமையாகக் கவனியுங்கள். ''உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்வள்ளல் பிரானார்க்கு வாய்க் கோபுர வாசல்தெள்ளத் தெளிந்தார்க்கு சிவன் சிவலிங்கம்கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே''இப்பாடல் கூறும் உண்மை என்னவென்றால், தவ வாழ்க்கையையே தம் வாழ்க்கையாகக் கொண்டவர்கள் ஞானிகள். இவர்கள் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். தெளிந்த சிந்தனை உடையவர்களாக இருப்பதால் இன்பம், துன்பம், பந்தம், பாசம், கோபம், ஆசை போன்ற மனதை மயக்கும் விஷயங்களைக் கடந்து சாந்தமே உருவமாக ஒரே இடத்தில் (காட்டில், மலையில் என்று கூட இருக்கலாம்) இருந்து தவம் செய்வார்கள். இவர்கள் தனது  உடலைக் கோயிலாகவும் உள்ளத்தைக் கருவறையாகவும், உயிரைச் சிவலிங்கமாகவும்  எண்ணுவர். கண், காது, மூக்கு, வாய் எனும்  ஐம்புலன்களையும் அடக்கி இவ்வைந்தும் தீபங்களாக இக்கோயிலில் எரிவதாக எண்ணுவர். இதற்கு அந்தர்யாகம் (அகப்பூஜை) என்று பொருள். இதைப்பற்றி அறிந்து கொள்ள தனி நூல்கள் ஏராளமாக உள்ளன. நீங்களும்  நாங்களும் குடும்பஸ்தர்கள்,  ஞானிகளின் நிலைக்கு நம்மை உயர்த்திக் கொள்ளும் வரையில் ஆலய தரிசனம் செய்தே புண்ணியம் பெறுவோமே!*÷க்ஷõடச தீபாராதனையின் நோக்கம் என்ன? ராஜமுருகையன், புதுச்சேரி.'÷க்ஷõடச' என்றால் 'பதினாறு'. பூஜையில்  பதினாறு வகை என்பது பல இடங்களில் செய்யப்படுவதாகும். அபிஷேகம் செய்யப்படும் திரவியங்கள், பூஜை துவங்குவது முதல் ஆவாஹனம் (நிறைவு) வரை செய்யப்படுகிற உபசாரங்கள், தீபாராதனைகள் ஆகிய மூன்று விஷயங்களிலும் பதினாறு வகைகள் முக்கியமானதாகச் சொல்லப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட இறைவனுக்கு நிறைய தீபாரதனைகள் செய்து கண் குளிரக் கண்டால் கண்நோய்கள் நீங்குமென சாஸ்திரங்கள் கூறுகின்றன. ராஜஉபசாரம் என்றும் இதனைச் சொல்வார்கள்.  சாமரம், விசிறி, ஆலவட்டம், கொடி போன்றவை அரசமரியாதைச் சின்னங்கள்.  இவையும்  தீபாராதனையில் அடங்கும்.  சுவாமிக்கு ராஜ உபசாரங்களைச் செய்தால், பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழலாம்.