உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

வாசகர்களின்  கேள்விகளுக்கு  பதிலளிக்கிறார்  மயிலாடுதுறை  ஏ.வி.சுவாமிநாத  சிவாச்சாரியார்.* புனரபி ஜனனம் புனரபி மரணம் என்றால் என்ன?  - அ.காயத்ரி, மதுரைநமக்குப் பல பிறவிகள் உண்டு. உயிர் என்றும் அழியாதது. நாம் ஒரு ஊருக்கு அடிக்கடி சென்று வருவது போல நாமும் இப்பூமியில் பிறந்து, பிறந்து இறக்கிறோம். இதைத் தான் 'புனரபி' என்கிறார் சங்கரர். புனரபி என்பதற்கு 'மீண்டும் 'என்பது பொருளாகும். பூமியில் இருந்து எடுக்கப்படும் தங்கம் தீயில் இடப்பட்டு மாற்று அடிக்கப்பட்ட பிறகே பொன்னிறம் பெற்று ஜொலிக்கும். அதுபோல, உயிர்களையும் கடவுள் பலமுறை பூமியில் பிறப்பெடுக்கச் செய்து இன்பதுன்பம் என்னும் தீயிலிட்டு பக்குவப்படுத்துகிறார். இறுதியில் மோட்சத்தைத் தந்து தன்னோடு சேர்த்துக் கொள்கிறார். * முன் ஜன்ம பாவம் என்றால் என்ன? எஸ்.மல்லிகா சீனிவாசன், பொழிச்சலூர்நாம் எடுக்கும் ஒவ்வொரு பிறவியிலும் நன்மை, தீமைகளைச் செய்கிறோம். நல்லன செய்தால் புண்ணியமும், தீயன செய்தால் பாவமும் கிடைக்கிறது. இவை வங்கியில் செய்யப்படும் முதலீடு போன்றது. வினைப்பயனால் உண்டாகும் இன்ப, துன்பங்களை அனுபவித்து முடிக்கும்வரை பிறவி தொடர்ந்து கொண்டேயிருக்கும்.  ஒருவர் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் 'போன ஜன்மத்துப் புண்ணியம், அவர் வசதியாக இருக்கிறார்' என்கிறோம். ஒருவர் துன்பப்பட்டால் 'போன ஜன்மத்துப் பாவம், பாடாய் படுகிறார்' என்கிறோம். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்கிறது புறநானூறு கூறுகிறது. இந்த உண்மையை உணர்ந்து இனியாவது நல்லதைச் செய்வோம். * சிவாலயங்களில் கால பைரவர் வழிபாடு பற்றி விளக்கம் கூறவும்? ஆர்.காயத்ரி பழனிகுமார்- மதுரைசிவபெருமான் மூன்று வடிவங்களில் நமக்கு அருள்பாலிக்கிறார். யோக வடிவம், வேக வடிவம், போக வடிவம். பைரவர் வேகவடிவத்தில் அமைந்தவர். எதிரிகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இவர் வழிபாடு அவசியமாகும். தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு உகந்த நாளாகும். ** திருப்புகழில் பாடல் முடிவில் 'பெருமாளே' என முடிகிறதே. முருகனுக்கும் பெருமாளுக்கும் என்ன சம்பந்தம்? ஜி.கண்ணாத்தாள், திருச்சுழிஎன்ன சம்பந்தமா? முருகன் திருமாலின் மருமகன் அல்லவா? பெருமாள் என்பது இறைவனுக்குரிய பொதுப்பெயர். சிறப்புப் பெயராகத் திருமாலைக் குறிக்கும். சிவன் விஷ்ணு என்ற பெயர்கள் கூட இலக்கண அடிப்படையில் பொருள் பார்த்தால் எல்லா தெய்வங்களுக்கும் பொருந்தும். குணத்தின் சிறப்பைக் கொண்டு காரணப் பெயராய் தனி ஒரு தெய்வத்தின் திருநாமமாயிற்று. அருணகிரிநாதர், பேதமின்றி எல்லாக் கடவுளரையும் திருப்புகழில் பாடுவதைக் காணலாம். * கோயில் கொடிமரத்தைத் தாண்டித் தான் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டுமா? அ.ராமன், திருவான்மியூர்ஆமாம். கோயிலில் ஒவ்வொரு சுவாமிக்கும் தனித்தனியாக நமஸ்காரம் செய்யக் கூடாது. கொடிமரத்திற்கு வெளியில் செய்தால் எல்லா சுவாமிக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்த புண்ணியம் கிட்டும்.* பிரார்த்தனை, தொண்டு இவற்றில் உயர்ந்தது எது? ஆர்.சாரதா, திருவான்மியூர்.பிரார்த்தனை, என்பது தமக்கு நலன் கிடைக்க வேண்டியும் செய்யலாம். எல்லோருக்கும் நலன் கிடைக்க வேண்டியும் செய்யலாம். தொண்டு என்பது பிறருக்கு உதவுவது மாத்திரம் அல்ல. கோயில் வழிபாடும் ஒரு தொண்டு தான். நாயன்மார்களைக் கூட திருத்தொண்டர்கள் என்று தானே சொல்கிறோம். எனவே, மக்களுக்காக இறைத் தொண்டு (பிரார்த்தனை) செய்வதே உயர்ந்தது. 'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு'  என்பதில் பிரார்த்தனையும் தொண்டும் இணைந்திருப்பதைப் பாருங்கள்.