உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

 வாசகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாõரியார்.** கடவுளுக்கு காணிக்கை செலுத்த எடுத்து வைத்துள்ள தொகையிலிருந்து வீட்டுச் செலவுக்கு அவசரம் கருதி பணம் எடுப்பது பாவமா? - பி.சேகர், ஊட்டி அதிபத்தர் என்ற நாயன்மார் மீன்பிடி தொழில் செய்துவந்தார். இவர் வலையில் விழும் முதல் மீனை 'சிவனுக்கு' என்று கூறி கடலிலேயே  விட்டுவிடுவார். இறைவன் சோதனை செய்ய விரும்பினார். வறுமையைக் கொடுத்தார். ஒருநாள் வலையில் ஒரு தங்க மீனை முதல் மீனாக விழச்செய்தார். அதையும் இறைவனுக்கு என்று கடலில் விட்டுவிட்டார். இதுதான் திடமான பக்தி. இப்படி பக்குவப்பட்ட பக்தி இருந்தால் நாம் தெய்வநிலைக்கு உயர்ந்துவிடலாம். அதிபத்தருக்கு ஈசன் அம்மையப்பராக காட்சி கொடுத்து சகல ஐஸ்வர்யங்களையும் அருளினார். நாயன்மார் நிலைக்கு அவரை உயர்த்தினார். இப்போது என்ன  செய்யலாம்? நீங்களே சொல்லுங்களேன்.* விரத நாட்களில் அரிசி உணவு ஏன் சாப்பிடக் கூடாது? - ஜி.ரோகிணி, சோழவரம், சென்னை'விரதம்' என்ற சொல்லுக்கு 'கஷ்டப்பட்டு இருத்தல்' என்று பொருள். நாள் முழுக்க தெய்வசிந்தனை மாறாமல் பசியோடு இருப்பது 'விரதம்'. 'பசி' என்ற நினைப்பு வரும்போதெல்லாம் 'தெய்வத்திற்காக விரதம் இருக்கிறோம்' என்ற நினைவும் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால்தான் விரதத்திற்கு  'உபவாசம்' (கடவுளின் அருகில் வசித்தல்) என்ற பெயரும் உண்டு. அரிசி உணவை உண்டால் தூக்கம் வந்துவிடும். பால், பழம் போன்ற மென்மையான உணவுகளை உண்டு தெய்வ சிந்தனையுடன் நாளை கழிப்பதே முழுமையான விரதம்.* சிவன் கோயிலுக்கு சென்று தரிசித்தபின் சிறிது நேரம் அமர்ந்துவர வேண்டும். விஷ்ணு கோயிலுக்கு சென்று தரிசித்தபின் நேராக வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள். விளக்கமாக  சொல்லுங்கள். ஏ.ஆர்.கஸ்தூரி ரங்கன், ராமநாதபுரம்சிவன் கோயிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பும்போது வழியில் ஏதேனும் இடையூறு ஏற்படாமல் இருக்க பூதகணங்களை நம்மோடு துணைக்கு அனுப்புகிறார் சிவன். அதனால் நாமும் சிறிதுநேரம் உட்கார்ந்து இறைவனிடத்தில் மகிழ்ச்சியை தெரிவித்துவிட்டு கிளம்புகிறோம். விஷ்ணு கோயிலில் தரிசித்துவிட்டு வரும்போது மகாலட்சுமி நம்மோடு வீட்டிற்கு வருகிறாள். அதனால் உட்காராமலும் வேறெங்கும் செல்லாமலும் வீட்டிற்கு நேராக வரவேண்டும். * கடவுளை பயபக்தியுடன் நாம் வழிபாடு செய்கிறோம். ஆனால், எந்த இடத்திலாவது பக்தனைக் கண்டு பகவான் பயந்ததாக வரலாறு உண்டா?  பி. மீனலோசனா, கடலூர்தியாகராஜ சுவாமிகள் ஒருமுறை ராமபிரானிடம் சென்று, தனக்கு மோட்சம் தரும்படி வேண்டினார். ஞான,கர்ம யோகம் இல்லாத உமக்கு மோட்சம் தரமுடியாது என்று மறுத்துவிட்டார் ராமச்சந்திர மூர்த்தி. எங்கு அப்ளிகேஷன் போட்டால் அவர் பணிவார் என்பதை தியாகராஜ சுவாமிகள் அறிந்திருந்தார். ஒருநாள் சீதாதேவி ராமனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். ராமனின் வாய் சிவக்கவில்லை. 'என் (மனைவி) மீது பிரியம் இருந்தால் தானே வாய் சிவக்கும்' என்று சொல்லி சிணுங்கினாள் சீதை. இதனால் அவர்களுக்குள் ஊடல் உண்டானது. ஊடலைத் தீர்க்க ராமனே முந்திக்கொண்டார். இதுதான் சமயமென அவரிடம் சீதை,'' என் மீது நிஜமான அன்பிருந்தால் என் குழந்தை தியாகராஜனின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்,'' என்றாள் பிராட்டி. பார்த்தீங்களா! மோட்சத்தை தர மறுத்த ராமனிடம், பிராட்டியார் மூலம் சாதித்துக் கொண்டார் தியாகராஜ சுவாமிகள். பக்தனுக்கு பகவான் கட்டுப்பட்டதைப் பார்த்தீர்களா! சீதையை வழிபடுவதன் மூலம் நமது நியாயமான எல்லா கோரிக்கைகளும் நிறைவேறும்.*எந்த தெய்வத்தை வணங்குவதற்கு முன்பும் குல  தெய்வ வழிபாடு அவசியம் என்கிறார்களே. குலதெய்வம் தெரியாவிட்டால் யாரைக் குலதெய்வமாகக் கொள்வது?கே. அமுதா, தேனி.குல தெய்வ வழிபாடு இன்றி செய்யும் எந்த பிரார்த்தனையும் நிறைவேறாது என்பது ஐதீகம் என்பது மட்டுமல்ல. நிஜமும் கூட. நம்முடைய முன்னோர்கள் எந்த தெய்வத்தைக் காலம் காலமாக வழிபட்டு வந்தார்களோ அந்த தெய்வ அருளைப் பெறுவது நம் வம்சவிருத்திக்கு மிகவும் அவசியம். ஸ்தல யாத்திரையாக திருப்பதி போன்ற புண்ணியத்தலங்களுக்குச் செல்லும் முன் குலதெய்வத்தை வணங்க வேண்டும். குல தெய்வம் தெரியாவிட்டால் மனதிற்கு பிடித்தமான தெய்வத்தையே ஏற்றுக்கொள்ளுங்கள். நான் சிபாரிசு செய்வது வெங்கடாஜலபதியையும், சாஸ்தாவையும் தான்.