உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

** வாஸ்து தோஷம் நீங்க எளிய பரிகாரம் ஏதாவது சொல்லுங்கள்? கே.சம்பத், திண்டிவனம் 'வாஸ்து தோஷம் என்ற ஒன்றே இல்லை, அதனால், நமக்கு எந்த கஷ்டமும் இல்லை' என்னும் இரண்டு வரிகளை முழுமையாக நம்பி, தினமும் 16 முறை ஜபம் செய்யுங்கள். இது தான் எளிய பரிகாரம். க்ஷ* குழந்தை இல்லாத தம்பதியரின் குறை தீர பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள். டி.குப்பம்மாள், ஈக்காடு சில விஷயங்களைச் செய்வதற்கு புத்திரனுக்கே அதிகாரம் இருக்கிறது. அதனால் ஒருவரை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்கிறது சாஸ்திரம். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். குழந்தை இல்லாத தம்பதியர் போலவே பெற்றோர் இல்லாத குழந்தைகளும் சிரமப்படுகிறார்கள். இருசாராரும் இணையும் முயற்சியை மேற்கொண்டால் எவ்வளவோ பேர் மகிழலாமே! * பிரதோஷத்தன்று நந்தியின் கொம்புக்கு இடையில் சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்பது ஏன்? த.லட்சுமி பிரபா, வாலஜாபாத் பிரதோஷ காலத்தில் நந்தியின் கொம்புக்கு இடையில் சுவாமி நடனம் ஆடுவதாக ஐதீகம். அந்த சமயத்தில் நந்தீஸ்வரரை வழிபட வேண்டுமே தவிர, நந்தியைத் தொட்டு கொம்புக்கு இடையில் தரிசிக்க முயல்வது, காதில் வேண்டுதலைச் சொல்வது போன்றவற்றில் ஈடுபடுவது கூடாது. ஆறுபடை வீட்டு தரிசனத்தை முதல் படை வீட்டிலிருந்து தான் தொடங்க வேண்டுமா? கே.வேலுச்சாமி, தாராபுரம் அப்படி ஒன்றும் கிடையாது. அவரவருக்கு ஏற்ற முறையில் படைவீடுகளை விரும்பிய நேரத்தில் தரிசிக்கலாம். கும்பாபிஷேகத்தை தரிசிப்பதால் ஏற்படும் நன்மையைக் கூறுங்கள். டி.ஜே.குபேந்திரன், எமனேஸ்வரம் ஆன்மிகத்தில் நிகழும் அபூர்வமான நிகழ்ச்சி கும்பாபிஷேகம். இதன் மூலம் கண்ணுக்குத் தெரியாத கடவுளை ஒரு குறிப்பிட்ட கோயிலில் குறிப்பிட்ட தெய்வத்தின் பெயரால் வரவழைக்கிறோம். தெய்வீக சக்தி அப்போது நம் உடலில் பதிவதால் இறைச்சக்தியில் மூழ்கி புனிதமடைகிறோம். இதனால், உடலும், மனமும் உறுதி பெற்று வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கிறது. கோயிலில் கொடிமரம் இருப்பதன் தத்துவம் என்ன? கே.ரமேஷ், போத்தனூர் 'ஆலயம் புருஷாகாரம்' என்று ஆகம சாஸ்திரம் கூறுகிறது. 'மனித உடலைப் போன்றது கோயில்' என்பது இதன் பொருள். கோயிலில் கருவறையே தலை. மகா மண்டபம் மார்புப் பகுதி, மார்பின் இடப்புறம் இதயம் துடிப்பது போல, நடராஜப் பெருமான் நடனமாடிக் கொண்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து வயிற்றுப் பகுதியில் நாபி எனப்படும் தொப்புள் பகுதியாக இருப்பது கொடிமரம். ராஜகோபுரம் இறைவனின் திருவடி. திருவிழா காலத்தில் தேவர்களை அழைப்பதற்காக கொடிமரத்தில் கொடியேற்றி வழிபாடு நடத்துவர்.