கேளுங்க சொல்கிறோம்!
** மணமக்கள் அருந்ததி நட்சத்திரம் பார்ப்பதன் நோக்கம் என்ன? ரா. செல்வி, நெய்வேலிவசிஷ்டர் என்னும் மாமுனிவரின் தர்மபத்தினி அருந்ததி. மனைவி என்னும் சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். வசிஷ்டர் மனதில் நினைப்பதையே அருந்ததி செயல்படுத்துவார். நீண்ட வம்சவிருத்தி கொண்டவர் இவர். பராசர முனிவருக்குப் பாட்டி. வியாசருக்குக் கொள்ளுப் பாட்டி என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இவரது ஒழுக்கத்தின் மாண்பினால் தீர்க்க சுமங்கலியாக விளங்கும் பாக்கியமும், வானில் நட்சத்திரமாகவும் ஒளிவீசும் பேறும் பெற்றவர். அருந்ததி போல வாழ வேண்டும். குலம் தழைக்க பிள்ளைகள் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் இம்மாதரசியை கண்டு வணங்கி ஆசி பெறுவது திருமண வைபவத்தில் முக்கியமான நிகழ்ச்சியாக கருதப்படுகிறது.* கோபுர தரிசனம் செய்வதால் மட்டுமே கோயிலுக்குச் சென்று வந்த பலனைப் பெற முடியுமா?கே.ஆர்.பத்மா, சென்னைவேலை நிமித்தமாக கோயிலுக்குச் செல்ல முடியாதவர்களுக்கும், பயணம் செய்பவர்களுக்கும் மட்டுமே கோபுரதரிசனம் பொருந்தும். மற்றவர்கள் கோயிலுக்குள் சென்று கடவுளை வழிபட்டு வருவதே முறை.* வழிபாட்டுக்குரிய விக்ரகங்களை கருங்கல்லில் மட்டும் வடிப்பது ஏன்?ஜி. ஜெயபாலன், மதுரைபஞ்சலோக விக்ரகங்களும் கோயிலில் இருக்கிறதே! இன்னும் தங்கம்,வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகங்களும் வழிபாட்டுக்காக வடிக்கப்பட்டுள்ளன. தெய்வீக சக்தியை ஈர்த்து தன்னுள் வைத்துக் கொள்ளும் தன்மை கருங்கல், உலோகம் என அனைத்திற்குமே இருக்கிறது.சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு வெளியே தான் செயய வேண்டும் என்கிறார்களே! ஏன்?எல்.ரங்கநாதன்,கடலூர்இரண்டு காரணங்களுக்காக இப்படிச் செய்ய வேண்டும் என்பது வழக்கம். ஒன்று நாம் காலை பின்புறமாக நீட்டி நமஸ்காரம் செய்யும் போது, கால்பக்கம் தெய்வ சந்நிதிகள் எதுவும் இருக்க கூடாது. கொடி மரம் இருக்கும் பகுதியில் வேறு சந்நிதிகள் இருக்காது என்பதால் அந்த இடத்தில் நமஸ்காரம் செய்கிறோம். மற்றொன்று கொடி மரத்தின் அருகில் பலிபீடம் இருக்கும். நம் மனதிலுள்ள ஆணவம், பேராசை, பொறாமை போன்ற தீய எண்ணங்களை நமஸ்காரம் செய்யும் போது பலியிடுவதாக அதாவது அகற்றிக் கொள்வதாக நமஸ்காரம் செய்கிறோம். இதனால் சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடிமரத்திற்கு வெளியே தான் செய்ய வேண்டும்.ஜுரதேவர் வழிபாட்டைப் பற்றிச் சொல்லுங்கள்.சு.பாலசுப்பிரமணியம், ராமேஸ்வரம்சிவபெருமானின் அம்சம் கொண்டவர் ஜுரதேவர். மூன்று தலைகளும், மூன்று கால்களும் கொண்டவர். திருநீற்றையே ஆயுதமாகக் கொண்டு மக்களுக்கு ஏற்படும் நோய்களைப் போக்குபவர். பழமையான சிவாலயங்களில் இவருக்கு சந்நிதி இருக்கும். இவரது திருவடியில் விபூதி வைத்து அர்ச்சித்து பூசிக்கொள்ள மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் வராமல் தீர்வு ஏற்படும். பாலபிஷேகம், தயிர்ச்சாத நைவேத்யம் இவருக்குரிய வழிபாடுகள்.