உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்!

* தெய்வங்கள் கைகளால் காட்டும் முத்திரையின் நோக்கம் என்ன?கே.எல்.புனிதவதி, கோவைஒவ்வொரு முத்திரைக்கும் ஒரு பெயருண்டு. அபய முத்திரை என்பது 'பயப்படாதே! உடன் உடனிருந்து காப்பாற்றுகிறேன்' என்பதையும், வரதமுத்திரை என்பது, 'உன் விருப்பத்தைக் கேள். வரம் தருகிறேன்' என்பதையும் குறிக்கிறது. தட்சிணாமூர்த்தி காட்டும் ஞானமுத்திரை என்பது கட்டை விரலின் அடியில் ஆள்காட்டி விரலை வைத்து, மற்ற மூன்று விரல்களையும் மேல்நோக்கியவாறு இருப்பதாகும். இதில் கட்டை விரல் இறைவன். ஆள்காட்டி விரல் மனிதன். மற்ற மூன்று விரல்களும் உலக வாழ்வின் ஆசாபாசம், இன்பம், துன்பத்தை குறிக்கும். இன்ப துன்பத்தைப் பொருட்படுத்தாமல் அதிலிருந்து விலகி மனிதன் கடவுளைச் சரணடைந்தால் பேரின்பம் உண்டாகும் என்பதே இதன் தத்துவம். இப்படி ஒவ்வொரு முத்திரைக்கும் தனித்தனி தத்துவங்கள் இருக்கின்றன.* பிள்ளையாரை முதல் தெய்வமாக வணங்குவது ஏன்?எம். ராமலிங்கம், விழுப்புரம் மற்ற தெய்வங்களுக்கு மந்திர பிரதிஷ்டை தேவைப்படும். ஆனால், சாணம், மஞ்சள், சந்தனம் என எதைப் பிடித்து வைத்தாலும் போதும். அங்கே பிள்ளையார் எழுந்தருளி விடுவார். 'பிடித்து வைத்தால் பிள்ளையார்' என்று இதைச் சொல்வது உண்டு. யானைமுகம் கொண்டவர் என்பதால் குழந்தைகளுக்கு இவரை எளிதில் அறிமுகப்படுத்தி விடலாம். குழந்தைக் கடவுள் என்பதால், இவர் முதற்கடவுள் ஆகி விட்டார். ** கஜபூஜை, கோபூஜை நடத்துவதன் நோக்கம் என்ன?எஸ்.சிவசித்ரா, சிட்லபாக்கம்ஆண் யானையாக இருந்தால் விநாயகராகவும், பெண் யானையாக இருந்தால் கஜ லட்சுமியாகவும் பூஜிப்பர். சிற்ப சாஸ்திரப்படி, கோவிலில் கோசாலை என்னும் மாட்டுத் தொழுவமும், யானைக் கொட்டகையும் குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்பட வேண்டும். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வசிப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே, கோபூஜை செய்தால் அக்கோவிலுக்கு எல்லா தேவர்களும் வந்து அருள்புரிவதாக ஐதீகம். இந்த பூஜைகளால் பக்தர்களின் விருப்பம் தடையில்லாமல் நிறைவேறும். செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.* குருவருள் இன்றி திருவருள் இல்லை என்கின்றனரே .... ஏன்?ஜி.பூமிநாதன், திருச்சுழிமாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தாய் முதல் தெய்வம். 'இவர் தான் உன் தந்தை' என்று குழந்தைக்கு உணர்த்துவதால், அவளே முதல் குரு. உழைத்து சம்பாதித்து கல்வியறிவு தந்து ஆளாக்கும் தந்தை இரண்டாவது தெய்வம். எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற நிலையில், ஆசிரியர் அடுத்த தெய்வமாகிறார். மாதா, பிதா, குரு ஆகிய மூவர் மூலமே தெய்வத்தை அடைய முடியும். இந்த மூன்று குருக்களின் வழிகாட்டுதல் இருந்தால் தெய்வத்தை அடைய முடியும் என்பதால் இப்படி சொல்கிறோம். * வெற்றிலைக்கும், சுபவிஷயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?கே.மகேஸ்வரி, மதுரை வெற்றிலை மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களில் ஒன்று. சுபவிஷயம் லட்சுமிகரம் பொருந்தியதாக இருக்க வேண்டியே வெற்றிலை முக்கிய இடம் வகிக்கிறது.