இலக்கியப் பார்வை
UPDATED : ஜூலை 30, 2010 | ADDED : ஜூலை 30, 2010
சங்க இலக்கியங்கள்சங்க இலக்கியங்களுக்கு 'பாட்டு' மற்றும் 'தொகை' என்று முடியும்படியாக பெயர் இட்டுள்ளனர். அவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்பன ஆகும். மூன்றாம் சங்ககாலத்தில் எழுதப்பட்ட இந்த நூல்களில் தெய்வங்களைப் போற்றும் பாடல்களாக அமைந்தவை, பரிபாடலும், திருமுருகாற்றுப்படையும் ஆகும். பரிபாடலில் 70 பாடல்கள் இருந்தன. முருகப்பெருமானைப் பற்றி 31 பாடல்களும், திருமாலைப் பற்றி 8 பாடல்களும், காளியைப் பற்றிய ஒருபாடலும், வைகை நதியைப் பற்றி 26 பாடல்களும், மதுரை நகரைப் பற்றி 4 பாடல்களும் இடம் பெற்றிருந்தன. ஆனால், நமக்கு கிடைத்தது 22 பாடல்கள் தான். இதில் திருமாலைக் குறித்து ஆறு பாடல்களும், முருகன் குறித்து எட்டும், வைகையைப் பற்றி எட்டும் மட்டுமே உள்ளன. 'திருமாலின் நாபியில் பூத்த தாமரை மலர் போன்றது மதுரை நகரம்' என்ற உவமையும், '' முருகப்பெருமானே! உன்னிடம் பொன் பொருளை நான் வேண்டவில்லை. உன் அன்பும் அருளும் எமக்குத் தருவாயாக!'' என்ற பொருள் படும்படியான பாடல்களும் புகழ் பெற்றவை. இந்தப் பாடல்களை 13 புலவர்கள் எழுதியுள்ளனர். பின்னர், இது தொகுக்கப்பட்டது. நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை முழுமையாகக் கிடைத்துவிட்டது.சிறுபாணாற்றுப்படைபத்துப்பாட்டு நூல்கள் பத்து. இவற்றில் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப் படை, கூத்தராற்றுப் படை (மலைபடுகடாம்) என்ற ஆற்றுப்படை நூல்களும், முல்லைப் பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, பட்டினப்பாலை ஆகியவையும் உள்ளன. இதில் பொருநராற்றுப்படை பற்றி ஏற்கனவே வெளியிட்டோம். இந்த வாரம் திருமுருகாற்றுப்படை பற்றி அறிவோம்.நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை 317 அடிகளுடன் (வரிகள்) ஆறு பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. இந்நூலுக்கு புலவராற்றுப்படை, முருகு என்ற பெயர்களும் உண்டு. முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர்), பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகிய கோயில்களின் சிறப்பு இடம் பெற்றுள்ளது. நூலின் முதல்பகுதியில், முருகனின் உருவச் சிறப்பு, சூரசம்ஹாரம், திருப்பரங்குன்றத்தின் செழிப்பு பற்றியும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் முருகனின் அழகு, ஆறுமுகங்கள், பன்னிரண்டு கரங்கள் செய்யும் செயல்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதியில் பழநியில் முருகனை வழிபடும் முனிவர்களின் (சித்தர்கள்) ஒழுக்கம் பற்றியும், நான்காம் பகுதியில் சுவாமிமலை அந்தணர் இயல்பும், ஐந்தாம் பகுதியில் குன்றுதோறாடலில் (திருத்தணி) வசித்த குறவர்களின் குரவையாட்டம் பற்றியும், ஆறாம் பகுதியில் முருகன் தன்னைத் தேடிவருபவர்களுக்கு அருள்கின்ற நிலை மற்றும் சோலைமலையில் விழும் அருவியின் சிறப்பு பற்றியும் கூறப்பட்டுள்ளது. ஐந்து நிலங்களின் கடவுள் தொல்காப்பிய காலத்தில் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்னும் ஐந்துவகை நிலப்பிரிவுகள் இருந்தன. குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த பகுதியாகும். முல்லை காடும் காடு சார்ந்த பகுதியாகும். மருதம் வயலும் வயல் சார்ந்த நிலப்பகுதி. நெய்தல் கடலும் கடல் சார்ந்த பகுதி . பாலை, மணலும் மணல் சார்ந்த நிலப்பரப்பு. அந்தந்த நிலத்து மக்கள் அவரவருக்குரிய தெய்வங்களை வழிபாடு செய்து வந்தனர். குறிஞ்சிக்கடவுளாக முருகப்பெருமான் வழிபாடு செய்யப்பட்டார். இன்றும் 'குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம்' என சொல்லப்படுவதைக் கேட்க முடிகிறது. முல்லைப்பகுதி மக்கள் மாயோன் எனப்படும் திருமாலை வழிபாடு செய்து வந்தனர். விவசாயநிலப்பகுதியான மருதத்தில் இந்திரனையும், கடற்பகுதியில் வருணனும், பாலையில் கொற்றவை எனப்படும் காளியும் தெய்வங்களாக விளங்கினர்.