தாமரைத் தண்டு லிங்கம் - (திருத்தல உலா)
சிவன் கோயில்களில் கல் அல்லது உலோகத்தினால் ஆன லிங்கம் பூஜைக்கு வைக்கப்பட்டிருக்கும். தஞ்சாவூர் மாவட்டம் பெருமகளூர் சோமநாதர் கோயிலில் தாமரைத் தண்டு லிங்கம் உள்ளது. இந்த சிவனை வணங்கினால் சந்திர தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. தல வரலாறு: பெருமகளூர் கிராமத்திலுள்ள குளத்தில் சோழ மன்னனின் யானை ஒன்று செந்தாமரையை பறிக்க முயன்ற போது குளம் முழுவதும் செந்நிறமாக மாறியது. இதை அறிந்த மன்னன் நீரை வெளியேற்றி பார்த்தபோது, அடியில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டான். மகிழ்ச்சியில் சிவலிங்கத்தை இறுக்கமாகக் கட்டித் தழுவி வணங்கினான். இதை அடுத்து லிங்கத்தை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி, "சோமநாதர்' என பெயர் ட்டினான். லட்சுமி வாசம் செய்யும் தாமரை மலர்கள் பூத்த குளத்தில், லிங்கம் கிடைத்ததால், குளத்திற்கு "லட்சுமி தீர்த்தம்' என பெயர் சூட்டப் பட்டது. சிறப்பம்சம்: தசரத மகாராஜா சோமயாகம் நடத்த எண்ணி தக்க இடத்தை தேர்ந்தெடுக்குமாறு குல குருவான வசிஷ்ட மகரிஷியை வேண்டினார். சோமயாகத்திற்கு பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்திலுள்ள அம்பர் மாகாளம் என்னும் திருத்தலத்தில் அவ்வாண்டு வசிஷ்டர் குறித்த தேதியில் வேறு ஒரு சோம யாகத்தை நிகழ்த்த அவ்வூர் மக்கள் நிச்சயித்திருந்தனர். அந்த நாளில் செய்யாவிடில் அதற்கு அடுத்த சரியான தேதி மூன்று ஆண்டு கழித்து வருவதால் தசரத மகாராஜா அம்பர் மாகாளத்திற்கு ஈடான திருத்தலத்தை சுட்டிக் காட்டுமாறு வசிஷ்டரை வேண்டினார். வசிஷ்டர், அகத்தியரை நாடி விளக்கம்வேண்டினார். அப்போது அம்பர் மாகாளத்திற்கு ஈடான தலம் பெருமகளூர் தலமே என அகத்தியர் கூறினார். தசரத மகாராஜா இந்த தலத்திற்கு வந்து சோம யாகத்தை நடத்தினார் என செவிவழி செய்தியுண்டு.தாமரைத்தண்டு லிங்கம்: இங்குள்ள லட்சுமி தீர்த்தம், சிவனது தலையிலிருந்து விழும் கங்கைக்குச் சமமானது. இதில் இருந்த தாமரைத் தண்டிலிருந்து உருவானது தான் இத்தல லிங்கம். இங்கு திரிபுவன சித்தர் என்பவர் வசித்துள்ளார்.. இங்கு அருளாட்சி புரியும் சோமநாதரின் லிங்கம், கல்லில் உருவானதல்ல, தாமரைத் தண்டினால் உருவானது. இத்தகைய அபூர்வமான சிவலிங் கத்தைப்போல், வேறு எங்கும் காண இயலாது. திறக்கும் நேரம் : காலை 7- 9 மணி, மாலை 5 - 7 மணி போன் : 90479 58135இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ள பேராவூரணி சென்று, அங்கிருந்து 15 கி.மீ. சென்றால் பெருமகளூரை அடையலாம். பஸ் வசதி உண்டு.