உள்ளூர் செய்திகள்

திருவாசகம் - மாணிக்க வாசகர் பாடுகிறார் - பாடல் - 149

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய்- இராப்பகல் நாம்பேசும் போது, எப்போதுஇப் போதார் அமளிக்கேநேசமும் வைத்தனையோ? நேரிழையாய்! நேரிழையீர்!சீசீ! இவையும் சிலவோ? விளையாடிஏசும் இடம் ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்தேசன் சிவலோகன்- தில்லைச் சிற்றம் பலத்துள் ஈசனார்க்கு அன்பர்யாம் ஆரேலோர் எம்பாவாய்! பொருள்: ''சிறந்த ஆபரணங்களை அணிந்திருப்பவளே! நாம் பேசும் போதெல்லாம், 'என்னுடைய முழுமையான அன்பும் நெஞ்சும் சிவபெருமானுக்கே உரியது' என்று கூறுவாய். ஆனால், அந்த அன்பையும் மனதையும் எப்போது மலர்ப்படுக்கைக்கு உரியதாக்கி விட்டாய்?'' என்று எழுப்ப வந்த பெண்கள் உறங்கும் பெண்ணை நோக்கிக் கேட்டனர். உறங்குபவள் அவர்களை நோக்கி, ''சிறந்த ஆபரணங்களை நான் மட்டுமே சூடிக்கொண்டிருக்கிறேனா! நீங்களும் தானே ஆபரணங்களை  அணிந்திருக்கிறீர்கள். ஒருவரை ஒருவர் ஏசிக் கொள்ளும் இடமா இது? ! நீங்கள் செய்யும் செயல் தகுமா?'' என்றாள்.  உடனே எழுப்ப வந்தவர்கள்,''பெண்ணே! தேவர்களும் வந்து வணங்கும் ஈசனின் திருவடிகள், பார்ப்பவரைக் கூசச் செய்யும் பேரொளி கொண்டவை. அந்தத் திருவடிகளைக் கொண்ட இறைவன் நமக்காக சிவலோகத்திலிருந்து திருச்சிற்றம்பலத்திற்கு எழுந்தருளி இருக்கிறான். நாம் அவனுடைய அன்பர்கள் அல்லவா? அதனால், பெண்ணே நீ எழுந்திருப்பாயாக!'' என்று  பெண்கள் உறங்குபவளை அழைத்தனர்.