தெய்வத் திருமணம் - 2
பெருமாள் - மகாலட்சுமி திருமணம்இந்திரன் பல ஆண்டுகளாக போராடி அசுரன் விருத்திராசுரனை தோற்கடித்து தேவலோகத்துக்குத் திரும்பினான். தேவர்கள் அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அப்போது அங்கு வந்த துர்வாச முனிவர் அவனது வெற்றியைப் பாராட்டி தன்னிடம் இருந்த தாமரை மலரை கொடுத்தார். அதன் பெருமையை அறியாத இந்திரன், தன் யானையிடம் அதைக் கொடுக்க அது காலில் இட்டு மிதித்தது.அதை பார்த்த முனிவர், “கர்வத்தால் என்னை அவமதித்து விட்டாய். பூலோகத்தில் உள்ள ஒரு மன்னரிடம் தோற்பாய். சக்கராயுதத்தால் உன் தலை துண்டிக்கப்படும். மகாலட்சுமியின் அருட்பார்வை விலகும். துன்பத்திற்கு ஆளாவாய்” என சாபமிட்டார். செல்வங்களை இழந்த இந்திரனிடம் இருந்து நீங்கிய மகாலட்சுமி பாற்கடலுக்குள் மறைந்தாள். இந்நிலையில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடைவிடாமல் போர் நடந்தது. இரு பிரிவிலும் அதிகமானவர்கள் இறந்து கொண்டே இருந்தனர். அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார், அவருக்கு தெரிந்த மிருத்யு சஞ்சீவினி என்ற மந்திரம் மூலம் இறந்த அசுரர்களை உயிர் பெறச் செய்தார். இதனால் அசுரர்களின் எண்ணிக்கை அப்படியே இருந்தது. ஆனால் தேவர்களின் எண்ணிக்கையோ குறைந்து கொண்டே போனது. கவலையடைந்த தேவர்கள் படைப்புக் கடவுளான பிரம்மாவிடம் தங்களின் வருத்தத்தை தெரிவித்தனர். பாற்கடலை கடைந்தால் அமுதம் கிடைக்கும். அதை சாப்பிட்டால் சாகாத நிலையை அடையலாம் என்றார். தேவர்களும் பாற்கடலைக் கடைய முடிவு செய்தனர்.அதற்கு மத்தாக மந்திர மலையையும், கயிறாக வாசுகி என்ற பாம்பையும் வைத்து கொண்டனர். பாற்கடலைக் கடைய தேவர்கள் மட்டும் போதாது என்பதால் அவர்கள் தங்களின் எதிரியான அசுரர்களையும் அழைத்தனர். கிடைக்கும் அமுதத்தில் பாதியை கொடுப்பதாக ஆசையாக அழைத்தனர். அவர்களும் ஓடி வந்தனர். ஒருபுறம் தேவர்களும், மறுபுறம் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடையத் தொடங்கினர். மந்திரமலை மூழ்கி விடாமல் இருக்க ஆமையாக அவதாரம் எடுத்த பெருமாள், மந்திர மலையின் அடியில் சென்று மலையைத் தாங்கினார். பாற்கடலில் இருந்து தேவலோக அழகிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை உள்ளிட்டோரும், தன்வந்திரி, சூரியன், சந்திரன், தேவலோக யானையான ஐராவதம், தேவலோக குதிரையான உச்சைச் சிரவஸ், காமதேனு(பசு), கற்பக மரமும் கடலில் இருந்து வெளியேறின. இதை எல்லாம் பார்த்த தேவர்களும், அசுரர்களும் வியந்தனர். இந்நிலையில் பாற்கடலில் இருந்து தலையை விரித்தபடி, அழுக்கு உடையுடன் மூதேவி வெளியே வந்தாள். அவளைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் முகம் சுளித்தனர். அவளுக்குப் பின்னால் பளிச்சென மகாலட்சுமி தோன்றினாள். இதை பார்த்த இரு கோஷ்டியினரும் (தேவர்கள், அசுரர்கள்) அவளைத் திருமணம் செய்ய போட்டியிட்டனர். ஆனால் அவளோ தனக்கு பெருமாளே கணவராக வேண்டும் என்றாள். பெருமாளும் சம்மதித்தார். அங்கேயே இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடானது. உடனே மூதேவி, ''நான் தானே முதலில் வந்தேன். எனக்குத் தானே முதலில் திருமணம் நடத்த வேண்டும்?” எனத் தகராறு செய்தாள். அனைவரும் அவள் சொல்வதில் நியாயம் உள்ளதே என்றனர். “தங்கையான எனக்கு முதலில் திருமணம் நடத்த வேண்டாம்” என்றாள் மகாலட்சுமி. மூதேவியைத் திருமணம் செய்ய யாரும் விரும்பவில்லை. இதனால் பெருமாள், மகாலட்சுமி திருமணம் தடைபட்டது. அப்போது அங்கு வந்த உத்தாலக முனிவர், அவளை திருமணம் செய்ய சம்மதித்தார். “அழுக்கு, புலம்பல், தலைவிரித்தல், அலங்கோலம், எதிர்மறை எண்ணம் எல்லாம் கொண்ட மூதேவியை மணக்க வேண்டாம்” என பலரும் கூறினர். தவ வலிமையால் அவளின் அனைத்து எதிர்மறை குணங்களை நீக்க முடியும் என்றார் முனிவர். இதைத் தொடர்ந்து முனிவருக்கும், மூதேவிக்கும் திருமணம் நடந்தது. அதன் பின் பெருமாளுக்கும், மகாலட்சுமிக்கும் திருமணம் நடந்தது. அன்பு, அமைதி, மகிழ்ச்சி, பலம், கல்வி, செல்வம், பூமி, புகழ் ஆகிய எட்டு சக்திகளும் கொண்ட அஷ்டலட்சுமியை பெருமாள் அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக துன்பம் தரும் குணங்களைக் கொண்ட மூதேவியை மணந்த உத்தாலக முனிவரின் தியாகத்தை அனைவரும் போற்றினர். பெருமாள், மகாலட்சுமியின் திருமண நாளைக் கொண்டாடும் வகையில் தீபங்கள் ஏற்றி கொண்டாடினர். --திருமணம் தொடரும்தேனி மு.சுப்பிரமணி99407 85925