தெய்வீக கதைகள் - 1
வெற்றியின் ரகசியம்பாண்டவர்களில் ஒருவரான பீமனின் மகன் கடோத்கஜனுக்கும், யாதவ அரசர் மூருவின் மகள் மவுர்விக்கும் பிறந்தவர் பர்பரிகன். முற்பிறவியில் யட்சனாக இருந்தார். தன் தாயிடம் வில் வித்தையைக் கற்றார். தவமிருந்து சிவபெருமானிடம் மூன்று அம்புகளை வரமாக பெற்றார். பகவான் கிருஷ்ணரைத் தன் குருநாதராக கருதி வாழ்ந்தார். பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் நடக்க இருந்த போது, இருவரில் வலிமையில்லாத படைகளுடன் சேர்ந்து தான் போர் செய்யப் போவதாக தன் தாயிடம் தெரிவித்து புறப்பட்டார். இந்த நிலையில் ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணர், தன்னை ஒரு அந்தணராக மாற்றிக் கொண்டார். அவ்வழியே வந்த பர்பரிகனிடம் மரத்தின் இலைகள் எல்லாவற்றையும் குறி வைத்து தைக்கச் சொன்னார். பர்பரிகன் பார்க்காத சமயத்தில் ஒரு இலையை மட்டும் தன் காலால் மறைத்துக் கொண்டார். மரத்திலுள்ள எல்லா இலைகளையும் குறி வைத்து பர்பரிகன் தைத்தார். கடைசியில் அந்த அம்பு கிருஷ்ணருடைய காலைச் சுற்றி வந்தது. உடனே காலை எடுத்து மறைத்து வைத்திருந்த இலையை காட்டினார் கிருஷ்ணர். தான் வைத்த சோதனையில் வெற்றி பெற்றாலும் போரில் அவன் ஈடுபடக்கூடாது என நினைத்தார். ஏற்கனவே பாண்டவர்கள், கவுரவர்களிடம் தான் கேட்ட ஒரு கேள்வியை இவனிடமும் கேட்டார். என்ன கேள்வி? பாரதப் போர் எத்தனை நாளில் முடியும்? என்பதுதான். பலரும் பல கருத்தை ஏற்கனவே சொன்னார்கள். ஆனால் 'ஒரே நாளில் முடிப்பேன்' என்றார் பர்பரிகன். தவமிருந்த போது பர்பரிகனுக்கு அம்புகளை கொடுத்த சிவபெருமான் இரண்டு நிபந்தனை விதித்தார். அதாவது அம்பை சொந்தப் பகைக்காக பயன்படுத்தக் கூடாது என்றும், நீ எந்தப் பக்கம் சேர்கிறாயோ அந்த அணி பலம் பெறும் என்றும் கட்டளை இட்டார். “போதுமான படைபலம் இல்லாததால் பாண்டவர்களுடன் சேர்ந்து கொள்வேன் என்கிறாயே! அப்போது கவுரவர்களின் படை வலிமை இல்லாமல் போகும். அப்போது நீ கட்சி மாறி விடுவாய். எந்தப் பக்கம் நீ சேருகிறாயோ அந்தப் பக்கம் வெற்றி பெறும். மறுபடியும் பலமில்லாத எதிராளியிடம் போக நேரிடும். இப்படியே மாறி மாறிச் சென்றால் கடைசியில் யாரும் மிஞ்ச மாட்டார்கள். அதனால் போரில் நீ பங்கேற்கக் கூடாது” என்றார் கிருஷ்ணர். தன்னுடன் பேசுபவர் பகவான் கிருஷ்ணர் எனத் தெரிந்ததும், “ குருவே! தாங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன்'' என்றார். “இந்தப் போரின் முடிவை நிர்ணயிக்கும் ஒருவன் இருக்கிறான். அவனுடைய தலை எனக்கு வேண்டும்'' என்றார் கிருஷ்ணர்.“ஆணையிடுங்கள் குருநாதா... கொண்டு வருகிறேன்'' என்றான் ஆவேசமாக.“அப்படியா... உன் தலையை வெட்டிக் கொடு'' என்றார்.“ பாரதப் போரைக் காண ஆவலாக இருக்கும் நான் அதை எப்படிக் காண்பது?'' எனக் கேட்டார் பர்பரிகன். “ உனக்கு வரம் தருகிறேன். உன் தலையை ஒரு உயரமான மலை மீது வைக்கிறேன். அங்கிருந்து போரை பார்க்கலாம்'' எனக் கூறினார் கிருஷ்ணர். பர்பரிகனும் தன் தலையை வெட்டி கிருஷ்ணரிடம் கொடுத்தார். கிருஷ்ணரும் அதை அங்கிருந்த மலை மீது வைத்தார். ஒவ்வொரு நாளும் அங்கிருந்தபடியே போரைப் பார்த்தார். போர் முடிந்ததும் பாண்டவர்கள் ஒவ்வொருவரிடமும் கிருஷ்ணர், ''இந்த வெற்றிக்குக் காரணம் யார் தெரியுமா?” எனக் கேட்க ஒவ்வொருவரும் 'நானேதான் காரணம்' என்றனர். “சரி! இந்தக் கேள்வியை இன்னும் ஒருவரிடம் போய் கேட்போம் வாருங்கள்'' என மலை மீதிருந்த பர்பரிகனிடம் அழைத்ததுச் சென்றார். அவரிடம் கேட்ட போது, “இதை நான் சொல்ல வேண்டுமா என்ன? எல்லாம் கிருஷ்ணரின் தந்திரமே'' என அந்த வெற்றியின் ரகசியத்தை தெரிவித்தார். உண்மை தானே!ராஜஸ்தான் மக்கள் 'கட்டு ஷ்யாம்ஜி' என்னும் பெயரில் தெய்வமாக பர்பரிகனை வழிபடுகிறார்கள். -தொடரும்உமா பாலசுப்ரமணியன்umakbs@gmail.com