நல்லதே நடக்கும்
இயற்கை என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது பச்சை நிறம். ஆம். பச்சை என்பது வளமை, பசுமையை குறிக்கும். செடி, கொடி, மரத்தின் இலைகள் என எல்லாமே பச்சைதான். முன்பு இப்படி இயற்கையோடு இணைந்து வாழ்ந்த முன்னோர்கள் அந்த இயற்கையையே கடவுளாக்கினர். இப்படி அவதரித்தவள்தான் காஞ்சிபுரம் மாவட்டம் சாத்தணஞ்சேரி பச்சையம்மன். அந்த ஊரே சில்லென்று இருக்கும். காரணம் மெல்லிய பூங்காற்றும், வேகமாக செல்லும் பாலாற்று நீரும்தான் காரணம். அந்த பாலாற்றங் கரையோரத்தில் குடியிருக்கிறாள் அம்மன். கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பு விழியை விரியப் பார்த்து இருக்கும் சிலைகள் நம்மை வரவேற்கும். சிவனை மட்டுமே வழிபடுபவர் பிருங்கி முனிவர். ஒருநாள் பார்வதியை வணங்காமல், சிவனை மட்டும் வலம் வந்து வணங்கினார். இதனால் கோபித்த அவள், 'ஐயனே. இது நியாயமா. தங்களின் உடலில் சரிபாதி எனக்கு தாருங்கள். அப்போது என்னை வழிபட்டுத்தானே ஆக வேண்டும்' என்றாள். அவரோ மறுக்க பார்வதி எப்படியும் பாதி உடம்பை அடைவேன் என சபதம் எடுத்தாள். செழிப்பு மிக்க இத்தலத்தில் தவம் செய்ய தங்கினாள். ஒருகட்டத்தில் பார்வதியின் மனதில் சிவன் மீதான அன்பு பெருகவே அவளது உடலும் உள்ளமும் பச்சை வண்ணமாக மாறியது. இதற்கு இடையே பார்வதிக்கு அசுரர்களால் இடையூறு ஏற்பட்டது. வாழ்முனி உள்ளிட்ட பலரும் அவளுக்கு துணையாக வந்தனர். தடைகளைத் தாண்டி தவத்தை நிறைவேற்ற, சிவனும் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். அவரே இங்கு அர்த்தநாரீஸ்வரராக அருள்புரிகிறார். உதவி செய்தவர்களுக்கு நன்றி செலுத்துவதுதானே முறை. இதனால் கோயிலின் முன் வாழ்முனி உள்ளிட்டவர்களின் சிலை கம்பீரமாக காட்சி தருகிறது. இவர்களைக் கடந்தால் பச்சையம்மன் தரிசனம். பச்சைப் பசேலென இருக்கும் அம்மனின் முகம், நம் கண்களை குளுமையாக்கும். கண்கள் மட்டும் அல்ல... வாழ்க்கையும்தான். நினைத்தது நிறைவேற அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்று பாலாற்று தீர்த்தத்தில் நீராடி அம்மனை வழிபட்டால் எல்லாம் நல்லதாக நடக்கும். விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், பூங்குழலி அம்மன், விரால் அழகி, சிவதுர்கை, நாகாத்தம்மன், மதுரை வீரன், ஜடாமுனி, செம்முனி, கருமுனி, தவமுனி, நாகமுனி, சங்குமுனி, வாழ்முனி, கன்னிமார், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. எப்படி செல்வது: செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியாக 15 கி.மீ.,விசேஷ நாள்: ஆடிப்பூரம், ஆடி வெள்ளி, தைப்பூசம்.நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 4:30 - 6:00 மணிதொடர்புக்கு: 94457 35955, 95249 82157அருகிலுள்ள கோயில்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி 40 கி.மீ., (வேண்டியது கிடைக்க...)நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 9:00 மணிதொடர்புக்கு: 0442 - 752 9217