உள்ளூர் செய்திகள்

பச்சைப்புடவைக்காரி - 27

எல்லாம் கூடி வரும் நேரத்தில்...என்முன் அமர்ந்திருந்த இளைஞனின் வயது 25. கோடீஸ்வரர் பாண்டியனின் ஒரே மகன். ஐநுாறு கோடி ரூபாய் சொத்திற்கு ஒரே வாரிசான சூரஜ்.“அப்பாவும் இன்னும் சில பெரிய பணக்காரங்களும் சேர்ந்து ஒரு கம்பெனி ஆரம்பிச்சாங்க. எங்கப்பா வஞ்சனையில்லாம உழைச்சாரு. முதல்ல கொஞ்சம் நஷ்டமாயிருச்சி. அதுக்கப்பறம் அப்பா கஷ்டப்பட்டு உழைச்சி கம்பெனிய நல்லாக் கொண்டு வந்துட்டாரு. இன்னிக்கு அந்தக் கம்பெனியோட மதிப்பு பல ஆயிரம் கோடிகள். இப்போ எங்கப்பாவத் துரத்திவிட்டுட்டு மொத்தக் கம்பெனியும் சொந்தமாக்கிக்கணும்னு பாக்கறாங்க. அதனால அப்பா கம்பெனி பணத்தத் திருடியதா கேஸ் போட்டிருக்காங்க. அப்பாவ எம்.டி., பதவியை விட்டு துாக்கிட்டாங்க. கோர்ட்டுல கேஸ் நடந்துக்கிட்டிருக்கு.“அதிர்ச்சில அப்பாவுக்குக் ஹார்ட் அட்டாக் வந்திருச்சி. இப்போதான் தேறிக்கிட்டு வராரு.“நேர்மையான அவருக்கு ஏன் சார் இப்படி நடக்கணும்? நாங்க மதுரைக்காரங்க. பச்சைப்புடவைக்காரியை தவிர வேற தெய்வத்தக் கும்பிடத் தெரியாதவங்க. எங்கள ஏன் அவ சோதிக்கணும்?”“என்ன நடக்குதுன்னு தெரியல. ஏதாவது தெரிஞ்சா...''“ஏதாவது பரிகாரம்...''“அப்படின்னு ஒண்ணும் இல்ல. மனசுல அன்பு குறையும் போதுதான் கஷ்டம் வரும்னு அவ சொல்லியிருக்கா. கஷ்டப்படறவங்களுக்கு உதவி செய்யுங்க. அதனால பிரச்னை தீரும்னு உத்தரவாதம் கிடையாது. மனசு அமைதிப்படும்”இரண்டு நாள் கழித்து சூரஜ் அலைபேசியில் அழைத்தான்.“எங்க இன்ஜினியரிங் காலேஜ்ல பத்து ஏழை மாணவர்களத் தேர்ந்தெடுத்து அவங்க இனிமே பீஸ் கட்ட வேண்டாம்னு சொல்லிட்டேன்''“சபாஷ். நாம செய்யறதச் செஞ்சாச்சு. இனிமே அவ பாத்துப்பா”மறுவாரமே சூரஜ் அழைத்தான்.“உங்க வாய்க்குச் சர்க்கரைதான் போடணும். அப்பா மேல எந்தத் தப்பும் இல்லன்னு நிரூபணம் ஆயிருச்சி. அவருடைய கூட்டாளிகள்ல ஒருத்தர் எல்லா ஆதாரங்களையும் எடுத்துக்கிட்டு நாளைக்கு அப்பாவ பாக்க வராரு. அப்பாவத் திரும்பவும் எம்.டி., சீட்ல உட்கார வைக்க நானாச்சுன்னு சொல்லிட்டாரு. உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க, சார். அப்பா உங்களுக்கு பென்ஸ் கார் வாங்கித் தரச் சொல்லியிருக்காரு”“வேண்டாம் சூரஜ். பென்ஸ் கார் வாங்கற காசில் நுாறு பேருக்கு இலவசக் கல்வி கொடுங்க. அம்மா மனசு குளிரும்”நிறைந்த மனதுடன் அன்று கோயிலுக்குச் சென்றேன். சிறப்புத் தரிசன சீட்டை வாங்க பணத்தை நீட்டினேன்.“இப்போது உன்னால் உள்ளே போக முடியாது. உனக்கு வெளியே வேலையிருக்கு”“தாயே” கத்தினேன்.“அந்த இளைஞனின் பிரச்னை முடிந்ததாக நினைக்கிறாயா... இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. அவன் உன்னையும் திட்டுவான். என்னையும் திட்டுவான். பதிலுக்கு அவனைத் திட்டாமல் நடப்பதெல்லாம் நன்மைக்கே என புரியவை.”கோயிலை விட்டு வெளியே வந்தவுடன் அலைபேசி ஒலித்தது. சூரஜ்.“என்ன சார் நடக்குது இங்க? பச்சைப்புடவைக்காரிக்கு நெஞ்சுல ஈரமேயில்லையா? எங்களக் கஷ்டப்படுத்திப் பாக்கறது மட்டும்தான் அவளுடைய ஒரே பொழுதுபோக்கோ?”“என்னாச்சு சூரஜ்?”“இன்னும் என்ன ஆகணும்? எங்கப்பாமேல எந்தத் தப்பும் இல்லன்னு உறுதிப்படுத்தற ஆதாரங்கள எல்லாம் எடுத்துக்கிட்டு அப்பாவோட கூட்டாளி ராமலிங்கம் அப்பாவப் பாக்க திருச்சியிலருந்து கார்ல வந்துக்கிட்டிருந்தாரு. அப்பாகிட்ட நல்ல சேதிய நானே சொல்லப் போறேன்னு சொன்னாரு. அதனால நான் ஒண்ணும் சொல்லல. ஆனா வர வழியில பெரிய விபத்துல மாட்டிக்கிட்டாரு. ஸ்பாட்ல ஆள் காலி. கார்ல இருந்த ஆதாரங்கள் எல்லாம் எங்க போச்சுன்னு தெரியல. எல்லாம் கூடி வர்ற நேரத்துல இப்படி அநியாயம் பண்ணிட்டாளே பச்சைப்புடவைக்காரி!”“இப்ப நீ எங்கப்பா இருக்க?”“எங்கப்பா திடீர்னு நெஞ்சு வலின்னு சொன்னாரு. ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணியிருக்கோம்.”“உன்னப் பார்க்க வர்றேன்”மருத்துவமனையின் முகப்பு அறையில் இருந்த பெண் என்னைப் பார்த்து புன்னகைத்தாள். “அந்த இளைஞனை மட்டும் பார். நான் உன் மனதில் தோற்றுவிப்பதை அப்படியே சொல். அதன்பின் என்னைப் பார்த்துவிட்டுப் போ.”தாயை வணங்கிவிட்டு சூரஜ்ஜைத் தேடி ஓடினேன். அவன் கொந்தளித்தபடி இருந்தான்.“விபத்து மட்டும் நடக்காம இருந்தா இத்தனை நேரத்துக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா? அப்பாவோட கேசெல்லாம் முடிஞ்சிருக்கும். அவருக்கு பேரும் புகழும் கிடைச்சிருக்கும். எல்லாம் வெத்து வேட்டா போச்சே சார்.”அவனுடன் மருத்துவமனையின் கேண்டீனுக்குச் சென்றேன். சூரஜ் தொடர்ந்து புலம்பினான். அவன் முன்னால் இருந்த காபியைத் தொடவில்லை. “ஒண்ணுமே நடக்காம இருந்திருந்தாக்கூட இவ்வளவு வலிக்காது சார். எல்லாம் கூடிவர நேரத்துல இப்படியா நடக்கணும்? ஏன் சார் எங்கள இப்படிச் சித்திரவதை செய்யறா?”எங்கிருந்துதான் எனக்கு அப்படி ஒரு ஆவேசம் வந்ததோ தெரியவில்லை.“நிறுத்துடா. இன்னும் ஒரு வார்த்தை என் தாயைப் பத்தித் தப்பாப் பேசினா உன்ன அடிச்சே கொன்னுருவேன். அந்த விபத்து நடக்காம இருந்தா இந்நேரத்துக்கு உங்கப்பன் செத்திருப்பாண்டா.”“என்ன சார் சொல்றீங்க?”“உங்கப்பாவுக்கு ஏற்கனவே ஹார்ட்ல பிரச்னை. சாதாரணமா இருந்த போதே நெஞ்சு வலி வந்திருச்சி. இன்னிக்கு மட்டும் உங்கப்பாவோட கூட்டாளி ஆதாரங்கள எல்லாம் காமிச்சி நீங்கதான் இனிமே எம்.டி.,ன்னு சொல்லியிருந்தா அந்த சந்தோஷத்துல கார்டியாக் அரஸ்ட் வந்து உங்கப்பா செத்திருப்பாரு. உங்கப்பாவோட கூட்டாளிங்க யாரும் சரியில்ல. உன்ன ஏமாத்தி சொத்துக்கள எழுதி வாங்கிட்டு நடுத்தெருவுக்குக் கொண்டு வந்திருப்பாங்க. நீ செஞ்ச நல்ல காரியம்தான் உங்கப்பாவ காப்பாத்துச்சு. “உங்கப்பா கேஸ் இன்னும் நாலு வருடம் நடக்கும். உங்கப்பா மேல எந்தத் தப்பும் இல்லன்னு கோர்ட் சொல்லிரும். அதுக்குள்ள நீயும் வளர்ந்திருவ. இந்தத் தொழிலுக்கு தலைவராகற தகுதி உனக்கு வந்திரும். அதுவரை அப்பாவ நல்லபடியா பாத்துக்கோ. நான் வர்றேன்”“மன்னிச்சிருங்க, சார். உணர்ச்சிவசப்பட்டு... ஏதோ''“என்கிட்ட மன்னிப்பு கேட்டு என்ன பிரயோஜனம்? பச்சைப்புடவைக்காரிகிட்ட கேளு”“அவகிட்ட எப்படி கேக்கறது?”“இன்னும் நிறைய ஏழை மாணவர்கள இலவசமாப் படிக்க வை. நல்லா இரு. வரேன்.”“இனி அந்த இளைஞனை நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கு என்ன வேண்டும் சொல், கொடுத்துவிட்டுப் போகிறேன்”“உங்களிடம் அது வேண்டும் இது வேண்டும் என கேட்காத மன நிறைவு வேண்டும். இன்பமோ, துன்பமோ எது நேர்ந்தாலும் அதை பிரசாதமாக ஏற்கும் பக்குவம் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக என் மனதில் உள்ள அன்பின் அளவு நாளுக்கு நாள் அதிகரிக்க வேண்டும்.”“பெரிய பட்டியலே சொல்கிறாயே”“பட்டியலில் உள்ள ஒரு வரத்தைக் கூட உங்களிடம் யாசிக்கும் உரிமையில்லாத கொத்தடிமை நான் என்ற எண்ணம் என் மனதை விட்டு நீங்காத வரம் வேண்டும் தாயே”தாயின் சிரிப்பு அண்டமெல்லாம் எதிரொலித்தது.-தொடரும் வரலொட்டி ரெங்கசாமிvaralotti@gmail.com